உச்சநேரமற்ற வேளைகளில் இலவச ரயில் பயணத் திட்டம் அறிமுகம் கண்டதிலிருந்து வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் கூட்ட நெரிசல் ஓரளவு குறைந்திருப்பதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரின் வடக்கு-கிழக்கு வட்டாரக் குடிமக்களை நகர மையத்திற்கு இணைக்கும் அந்த ரயில் பாதை நெரிசல் மிக்க வழித்தடங்களில் ஒன்று.
அந்த வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தரவுகள் சுட்டுகின்றன.
வடக்கு-கிழக்கு வழித்தடத்தை நிர்வகிக்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம், இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் ஒவ்வொரு நாளும் 610,814 பேர் அதில் பயணம் செய்ததாகத் தெரிவித்தது.
2025ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தைக் காட்டிலும் அது 2.7 விழுக்காடு அதிகம்.
பயணிகளின் கூட்டம் அதிகமாகி வருவதால் காலை உச்சநேரங்களில் ரயிலில் ஏற பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியது தெரியவந்தது.
அதனால், உச்சநேரமற்ற வேளைகளில் குறிப்பிட்ட நிலையங்களில் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டம் 2025 டிசம்பர் 27ஆம் தேதி அமல் செய்யப்பட்டது.
செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி நிலையங்களிலும் வடக்கு-கிழக்கு வழித்தடத்தில் உள்ள ஆறு நிலையங்களில் அந்தத் திட்டம் நடப்புக்கு வந்தது.
பொங்கோல் கோஸ்ட், பொங்கோல், செங்காங், புவாங்கோக், ஹவ்காங், கோவன் ஆகிய ஆறு நிலையங்கள் அவை.
வடக்கு-கிழக்கு ரயில் வழித்தடப் பயணிகளில் கிட்டத்தட்ட 9 விழுக்காட்டினர் அந்தச் சலுகையை அனுபவித்து வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்தத் திட்டம் ஓரளவு பலனைத் தந்திருப்பது, கடந்த வாரம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
வடக்கு-கிழக்கு வழித்தடத்தில் உள்ள வெவ்வேறு நிலையங்களில் 15 பயணிகளைச் சந்தித்து கருத்து கேட்டபோது நெரிசல் குறைந்து நிலை மேம்பட்டிருப்பதாகப் பெரும்பாலானோர் கூறினர்.
ஜூன் 29ஆம் தேதி ஹவ்காங் ரயில் நிலையத்தில் பயணிகளைச் சந்தித்தது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.
இலவசப் பயணத் திட்டம் அறிமுகமாகும் முன்னர் உச்சநேர ரயில்களில் குறைந்த இடமே இருந்ததாகவும் தற்போது போதுமான அளவுக்கு இடமிருப்பதாகவும் சிலர் தெரிவித்தனர்.

