2025ஆம் ஆண்டில், தங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளை விற்பனை செய்வதில் இனம் அடிப்படையிலான இட ஒதுக்கீடு கொள்கையினால் சிரமங்களை எதிர்கொண்ட வீட்டு உரிமையாளர்களில் ஏறத்தாழ 30 விழுக்காட்டினரின் மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இனம் அடிப்படையிலான இட ஒதுக்கீடு வரம்புகளால் வீடுகளை விற்க முடியாத வீட்டு உரிமையாளர்களிடமிருந்து ஐந்து வீடுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் திரும்ப வாங்கியதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹோங் டாட் புதன்கிழமையன்று (பிப்ரவரி 25) தெரிவித்தார்.
பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வெலரி லீ எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த அமைச்சர் சீ, 2025ஆம் ஆண்டில் இன ஒருங்கிணைப்புக் கொள்கை தொடர்பான 657 மேல்முறையீடுகளில் 208 மேல்முறையீடுகளுக்கு வீவக அனுமதி வழங்கியதாகக் குறிப்பிட்டார்.
657 மேல்முறையீடுகளில் 164 மேல்முறையீடுகள் சீன வீட்டு உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்டவை. 140 மேல்முறையீடுகள் மலாய் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்டவை. 353 மேல்முறையீடுகள் இந்தியர் அல்லது பிற இனப் பிரிவைச் சேர்ந்தவர்களிடமிருந்து பெறப்பட்டவை.
சீன வீட்டு உரிமையாளர்கள் சமர்ப்பித்த மேல்முறையீடுகளில் 15 விழுக்காட்டு மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மலாய் வீட்டு உரிமையாளர்கள் சமர்ப்பித்த மேல்முறையீடுகளில் 31 விழுக்காட்டு மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தியர் அல்லது பிற இனப் பிரிவைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்களின் மேல்முறையீடுகளில் 40 விழுக்காடு மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வீட்டை விற்கத் தீவிர முயற்சி எடுத்தும் தோல்வியடைந்த உரிமையாளர்களுக்கு உதவும் கடைசி முயற்சியாகவே வீவக திரும்ப வாங்கும் திட்டம் செயல்படுத்துகிறது என்று அமைச்சர் சீ கூறினார்.

