சிங்கப்பூருக்கும் நார்வேக்கும் இடையிலான தடையற்ற வணிகத்துக்கான ஐரோப்பியச் சங்கம் (EFTA) - சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தம் (ESDEA), ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) நடப்புக்கு வந்ததாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த உடன்பாடு 2025 செப்டம்பர் 25ஆம் தேதி கையெழுத்திடப்பட்டதாக அது குறிப்பிட்டது.
சிங்கப்பூருக்கும் தடையற்ற வணிகத்துக்கான ஐரோப்பியச் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கும் இடையில் மின்னிலக்கப் பொருளியலில் தொடர்பை அதிகரிக்க இந்த ஒப்பந்தம் உதவும்.
நிதிச் சேவை உட்பட பல்வேறு துறைகளில் நம்பகமான, எல்லை கடந்த தரவுப் பரிமாற்றத்துக்கான தெளிவான, வலுவான விதிமுறைகளை இந்த உடன்பாடு வரையறுத்துள்ளது. மின்னிலக்க வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான நம்பிக்கையையும் சட்டரீதியான நிலைத்தன்மையையும் நிறுவனங்களுக்கு இது வழங்குகிறது.
இந்த ஒப்பந்தம் நடப்பிற்கு வந்திருப்பது மின்னிலக்க வர்த்தகத்திற்கான பாதுகாப்பான, நம்பகமான சூழலைப் பேணுவதில் இருதரப்பும் கொண்டுள்ள வலுவான கடப்பாட்டைக் காட்டுவதாக வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.
“இந்த ஒப்பந்தம் இருதரப்பு நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்குவதோடு மின்னிலக்கப் புத்தாக்கம், வர்த்தகம் ஆகியவற்றுக்கான முன்னணி நடுவமாகப் பங்களிக்கும் சிங்கப்பூரின் ஆற்றலையும் வலுப்படுத்துகிறது,” என்றார் அமைச்சர்.
பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடனான சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தங்களும் இந்த ஒப்பந்தமும் இணைந்து ஐரோப்பிய நாடுகளுடனான சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
தடையற்ற வர்த்தகத்துக்கான ஐரோப்பியச் சங்கத்தின் இதர உறுப்பு நாடுகளுடனும் இந்த ஒப்பந்தம் நடப்புக்கு வருவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறிய அமைச்சர் கிரேஸ் ஃபூ, உலகளாவிய நிலையில் மின்னிலக்க வர்த்தகத்துக்கான விதிமுறைகளை மேம்படுத்த இருதரப்பும் தொடர்ந்து பணியாற்றும் என்றார்.

