மருத்துவமனைக்குச் செல்வதைத் திட்டமிட உதவும் மின்னிலக்க அம்சம்

மருத்துவமனைக்குச் செல்வதைத் திட்டமிட உதவும் மின்னிலக்க அம்சம்

2 mins read
74b8ef23-88c2-4460-8478-9d664556cd5c
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை (என்யுஎச்) சிறார் அவசர சிகிச்சைப் பிரிவு, என்யுஎச் அவசர சிகிச்சைப் பிரிவு, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு, அலெக்சாண்ட்ரா மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றின் காத்திருப்பு நேரத்தை இச்செயலியின் மூலம் தெரிந்துகொள்ளலாம். - படம்: தேசிய பல்கலைக்கழக சுகாதாரக் குழுமம்

மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளின் அனுபவங்களை மேம்படுத்தவும் மருத்துவமனை வருகைத் திட்டமிடல் குறித்து அவர்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளவும் ஆதரவளிக்கும் புதிய மின்னிலக்க அம்சங்கள் தேசியப் பல்கலைக்கழகச் சுகாதார குழுமத்தின் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அவசர சிகிச்சைக்கான காத்திருப்பு நேரம், சுகாதார உறுதிப்பாடுகளை முன்கூட்டியே நிரப்புதல் உள்ளிட்டவை இப்புதிய அம்சங்களில் அடங்கும்.

நோயாளியோ, அவரது பராமரிப்பாளரோ இத்தகவல்களை முன்கூட்டியே நிரப்பி, மருத்துவமனையில் நேரடியாக இவற்றைப் பதிவு செய்யும் நேரத்தைக் குறைக்கலாம். இப்படிவத்தில் குறிப்பிடப்படும் தகவல்களின் உதவியுடன் அதிக அபாயமுடைய நோயாளிகள், தொற்றுநோய் சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இயலும்.

மேலும், அறிகுறிகளைப் பொறுத்து மருத்துவமனைக்குச் செல்வதன் அவசியம் குறித்து குழப்பமுள்ள நோயாளிகள், செயலியிலுள்ள ‘நர்ஸ்ஃபர்ஸ்ட் ஹெல்ப்லைன்’ (NurseFirst helpline) எனும் உதவியை நாடலாம். பகிரப்படும் அறிகுறிகளைக் கொண்டு உரிய பராமரிப்பைத் தொடர்புகொள்ள பயிற்சிபெற்ற தாதியர் உதவுவார்கள்.

பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள மருந்தகங்களையும் இச்செயலியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

முக்கியத் தகவல்களை அணுகக்கூடிய வகையிலும் புரிந்துகொள்ள எளிதாகவும் வழங்குவதன் மூலம் நோயாளிகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கிடைக்கிறது,” என்று கூறிய பேராசிரியர் மேல்கம் மகாதேவன், “இது சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் ஆதரவாக அமைவதுடன் நிலையான சுகாதாரக் கட்டமைப்புக்கு வித்திடுகிறது,” என்றார்.

செயலியின் அண்மைய மேம்பாடுகளுக்குப் பங்களித்த தேசியப் பல்கலைக்கழக சுகாதாரக் குழுமத்தின் நிபுணர் குழு. (இடமிருந்து) அவசர மருத்துவக் குழுத் தலைவர் சார்புநிலைப் பேராசிரியர் மேல்கம் மகாதேவன், குழுச் சேவை மாற்றப் பணிகளின் தலைவர் இங் பீ லிங், மின்னிலக்க அவசர சிகிச்சைத் திட்டத் தலைவரும் அவசர சிகிச்சைப் பிரிவின் மூத்த ஆலோசகருமான டேனியல் சோர்.
செயலியின் அண்மைய மேம்பாடுகளுக்குப் பங்களித்த தேசியப் பல்கலைக்கழக சுகாதாரக் குழுமத்தின் நிபுணர் குழு. (இடமிருந்து) அவசர மருத்துவக் குழுத் தலைவர் சார்புநிலைப் பேராசிரியர் மேல்கம் மகாதேவன், குழுச் சேவை மாற்றப் பணிகளின் தலைவர் இங் பீ லிங், மின்னிலக்க அவசர சிகிச்சைத் திட்டத் தலைவரும் அவசர சிகிச்சைப் பிரிவின் மூத்த ஆலோசகருமான டேனியல் சோர். - படம்: தேசிய பல்கலைக்கழகச் சுகாதாரக் குழுமம்

“நோயாளிகளுக்கு அவசர சிகிச்சைக்கு வருகையளிப்பது மன அழுத்தம் தருவதை உணர்கிறோம். அதே நேரத்தில், காத்திருப்பு நேரம் குறித்த வெளிப்படைத்தன்மை நோயாளிகளின் திட்டமிடலுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு சீரான நிர்வகிப்புக்கும் உதவுகிறது,” என்றார் அவர்.

கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட இச்செயலி, சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக மேம்பாடு கண்டுள்ளது. 2027ஆம் ஆண்டில் பொதுச் சுகாதாரச் செயலிகளை ஒன்றிணைந்த தளமாக்கும் முயற்சிகளைச் சுகாதார அமைச்சு திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்