நெகிழிப் பொருள்களை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், உலகிலேயே முதன்முறையாக ‘மின்னிலக்கக் கடப்பிதழ்’ முறையைச் சிங்கப்பூர் உருவாக்கி வருகிறது.
சிங்கப்பூரின் குப்பை நிரப்பும் ஒரே இடமான செமக்காவ் தீவில் இன்னும் பத்தாண்டுகளில் இடம் தீர்ந்துவிடும் என்பதால் அதன் பயன்பாட்டை மேலும் நீட்டிக்கும் நோக்கில் இத்திட்டம் இடம்பெறுகிறது.
மின்னிலக்கக் கடப்பிதழ் முறையின்மூலம் நெகிழியின் தோற்றுவாயையும் மறுசுழற்சியையும் கண்காணிக்க மூலக்கூறு நிலையில் அது அடையாளப்படுத்தப்படும்.
அதுகுறித்த ஆவணங்கள் தரவுத்தொடரில் (blockchain) எழுதப்பட்டிருக்கும் என்பதால், நெகிழியின் தோற்றுவாய், சேர்மானம், மறுபயனீட்டுச் சுழற்சிகள், அகற்றல் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கிய மின்னிலக்கக் கடப்பிதழை நெகிழி தயாரிப்பு, மறுசுழற்சி நிறுவனங்களுக்கு இடையிலும் தணிக்கைக்காக அதிகாரிகளுடனும் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
நாஸ்டாக் பங்குச்சந்தைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ‘செக்யூரிட்டி மேட்டர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, சிங்கப்பூரின் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பு (ஏ*ஸ்டார்) இந்தப் பல்லாண்டு முயற்சியை வழிநடத்துகிறது.
உலோகங்கள், ரப்பர் உள்ளிட்டவையும் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறுசுழற்சிக்கு உட்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.
இம்முயற்சியின்மூலம், சிங்கப்பூரின் கழிவுகளற்ற சூழலுக்கான பெருந்திட்டத்திற்கு இணங்க, மறுசுழற்சி விகிதத்தை அதிகரிக்கவும் செமக்காவ் குப்பை நிரப்பும் பகுதிக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவைக் குறைக்கவும் இயலும் என நம்பப்படுகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு சிங்கப்பூர் வீடுகளில் மறுசுழற்சி செய்யும் விகிதம் 11 விழுக்காடு என முன்னில்லாத அளவிற்குக் குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
நெகிழி உள்ளிட்ட பலவகைக் கழிவுகளையும் சிங்கப்பூர் எரியூட்டுகிறது. இப்போதைய நிலவரப்படி, நாள்தோறும் 2,000 டன் எரியாலைச் சாம்பலும் எரிக்கப்பட முடியாத கழிவுகளும் செமக்காவிற்கு அனுப்பப்படுகின்றன.
கழிவுகளற்ற சூழலுக்கான பெருந்திட்டத்தின்கீழ், 2024ல் 50 விழுக்காடாக இருந்த மறுசுழற்சி விகிதத்தை 2030க்குள் 70 விழுக்காடாக உயர்த்த சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது. தொழில், வணிக நிறுவனங்களின் கழிவுகளையும் இது உள்ளடக்கும்.
அதுபோல, வீடுகளில் மறுசுழற்சி செய்யும் விகிதத்தை 2030க்குள் 30 விழுக்காடாக உயர்த்தவும் இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.
மின்னிலக்கக் கடப்பிதழ் திட்டத்தின் முதல் மூன்று ஆண்டுகளில், புட்டிகளிலும் மெருகுறையிலும் (laminate) இருந்து பெறப்படும் நெகிழிகளின் மறுசுழற்சி கண்காணிக்கப்படும் என்று ‘செக்யூரிட்டி மேட்டர்ஸ்’ நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு ஹேகை ஆலன் கூறினார்.