மின்சிகரெட் குற்றங்களைத் தடுக்க உதவும் மின்னிலக்கத் தளம்

மின்சிகரெட் குற்றங்களைத் தடுக்க உதவும் மின்னிலக்கத் தளம்

2 mins read
aa95654e-2cfd-4a67-a95d-c9f66b91b472
மின்சிகரெட் பற்றிய தகவல்களை ஒருங்கிணைக்கும் விஐஎஸ் எனும் கட்டமைப்பை கவ்டெக், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவை இணைந்து மூன்றே மாதங்களில் உருவாக்கின. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சிகரெட் குற்றச்செயல் தகவல்களை உள்ளடக்கிய மின்னிலக்கத் தளம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

மூன்று மாதங்களில் உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் விஐஎஸ் எனும் அந்தத் தளத்தை கவ்டெக் உருவாக்கியிருந்தது. சுகாதார அறிவியல் ஆணையமும் இதில் இணைந்து செயல்பட்டது.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி மின்சிகரெட்டுக்கு எதிரான தற்காலிகச் சட்டத்தின்கீழ் ஒருவர் பிடிபட்டார். அப்போது குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட அந்தத் தளம் சிறப்பாகச் செயல்பட்டதால் சுகாதார அறிவியல் ஆணையத்தின் குழு மகிழ்ச்சி அடைந்தது.

மின்சிகரெட் குற்றச்செயல்களைக் கையாள்வதற்கான புதிய தளத்தை அமலாக்க அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது 5,500க்கும் மேற்பட்ட மின்சிகரெட் குற்றச்செயல்கள் கையாளப்பட்டுள்ளன. அமலாக்கத்திற்கான கண்காணிப்பு அம்சங்கள், முகமைகளுக்கு இடையிலான தகவல் பகிர்வு, போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு முன்னேற்றம் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.

2018ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டன. முன்பு அது ஒரு புகைப்பிடிக்கும் பிரச்சினையாகக் கருதப்பட்டது.

ஆனால் 2025ஆம் ஆண்டின் மத்தியில் கேபோட்கள் தலையெடுத்ததால் புகைப்பிடிக்கும் பிரச்சினை தீவிரமடைந்தது. மின்சிகரெட்டுகளில் எட்டோமிடேட் உள்ளிட்ட மயக்க மருந்துகளைக் கலக்க அவை பயன்படுத்தப்பட்டன. இதனைப் பயன்படுத்தியவர்கள் வலிப்பு மற்றும் மனநோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து 2025 செப்டம்பர் 1ஆம் தேதி எடோமிடேட்டை ‘சி’ பிரிவின்கீழ் போதைப் பொருளாக அரசாங்கம் வகைப்படுத்தியது. இது, கடுமையான தண்டனைகளை விதிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்யவும் வழிவகுத்தது.

சுகாதார அறிவியல் ஆணையத்தைப் பொறுத்தவரை மின்னிலக்கத் தளம் ஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆணையத்தின் அமலாக்கப் பிரிவின் இயக்குநரான திருமதி ஆனி டான், அபராதம் விதிப்பதிலிருந்து, விசாரணைகள் மற்றும் மறுவாழ்வு சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான சிக்கலான வழக்குகளை நிர்வகிக்கும் பணிக்கு மாறுவதே மிகப்பெரிய தடையாக இருந்தது என்றார்.

“முன்பு எங்களிடம் இருந்த அமைப்பு, அமலாக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அது, மின்சிகரெட்டுகளால் ஏற்படும் புதிய பிரச்சினைகளைக் கையாள்வதற்காக உருவாக்கப்படவில்லை. நாங்கள் இப்போது மறுவாழ்வுப் பணிகளைக் கவனிக்கும் வகையில் புதிய அம்சங்களைக் கட்டமைப்பில் சேர்த்துள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்