தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஒன்பது ஆண்டுகளாகத் தலைவர் பொறுப்பில் செயலாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயருக்கு அடுத்து திரு தினேஷ் இந்தப் பதவியை ஏற்கிறார்

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் புதிய தலைவர் தினேஷ் வாசு தாஸ்

2 mins read
c0185810-6336-494b-a36d-40650a732d35
தமிழ் கற்றல் வளர்ச்சிக் குழுவினருடன் பங்காற்ற ஆவலாய் இருப்பதாக மனிதவள மற்றும் கலாசார, சமூக, இளையர் துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு கூறினார். - படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மனிதவள மற்றும் கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயருக்கு அடுத்து திரு தினேஷ் இந்தப் பதவியை ஏற்கிறார்.

2011ல் துணைத் தலைவராகவும் 2016ல் தலைவராகவும் பொறுப்பேற்ற திரு விக்ரம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவை நோக்கத்துடனும் தெளிவான சிந்தனையுடனும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் வழிநடத்தியதாகக் கல்வியமைச்சின் தாய்மொழிக் கற்றல் பிரிவின் பாடத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் வி. சிவகுமார் தெரிவித்தார்.

“உங்களது வழிகாட்டுதலில் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு வலுவடைந்து சமூகப் பங்காளிகளுடன் வலுவான உறவுகளை வளர்த்துள்ளது. பயன்மிக்க தொடர்புகளை உருவாக்கி வகுப்பறைகளில் தமிழுக்கு உயிரூட்டும் திட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளது,” என்று திரு சிவகுமார், திரு விக்ரமுக்கு அனுப்பிய மின்மடலில் பாராட்டினார்.

“பண்பாட்டுக்கும் அடையாளத்திற்கும் மொழி பாலமாக விளங்குகிறது என நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை, ஊக்கமூட்டுவதுடன் அது நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையையும் தருகிறது. உங்களது ஆதரவால் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் அதிகாரம் பெறுவதுடன் இளம் மாணவர்களும் குடும்பங்களும் உண்மையாகவே மொழியில் இணைகின்றனர். தமிழ் கற்பிக்கப்படுவது மட்டுமல்லாமல் அது உயிர்ப்புடன் இருப்பதையும் நீங்கள் உறுதி செய்துள்ளீர்கள்,” என்று திரு சிவகுமார் புகழ்ந்தார்.

இதற்குப் பதிலளித்த திரு விக்ரம், பல்வேறு சந்திப்புகளிலும் நடவடிக்கைகளிலும் சேவையாற்றிய தமிழ்மொழிக் கற்றல், வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

“திட்டங்களைச் செயல்படுத்துவது, முன்மொழிவுகளை ஆராய்வது, திரை மறைவிலிருந்து எல்லாவற்றையும் நடத்துவது என அனைத்திலும் நீங்கள் காட்டிய கடும் உழைப்புக்கு என் நன்றி.

“இதனால் ஆண்டுகள் செல்லச் செல்ல, நாம் படிப்படியாக அதிகமானோரைக் கூடுதலான வழிகளில் சென்றடைந்துள்ளோம்,” என்று தலைவராக மூன்று தவணைகளாகப் பதவி வகித்த திரு விக்ரம் கூறினார்.

சிங்கப்பூரில் பல ஆண்டுகளாகத் தமிழை மேம்படுத்திய மாண்புமிகு பணியை ஆற்றியதற்காக திரு விக்ரமுக்கு நன்றி தெரிவித்த திரு தினேஷ், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவினருடன் பங்காற்ற ஆவலாய் இருப்பதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்