சிரமமான காலகட்டங்களில் வழிகாட்டிய முன்னோடிகளையும் தலைவர்களையும் நாடு நம்பியிருப்பதாகக் கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசுதாஸ் தெரிவித்துள்ளார்.
எல்லார்க்கும் தரநிலைகளையும் வழிகாட்டுதலையும் அளிக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழும் ஆளுமைகளைச் சிறப்பித்து நினைவுகூரும் அரும்பணியைச் சிங்கப்பூரின் புகழ்பெற்ற இந்தியர்கள் பட்டியல் அங்கீகரிப்பதாகத் திரு தினேஷ் பாராட்டினார்.
ராஃபிள்ஸ் டவுன் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்ர் 21) மாலை, இப்பட்டியலில் இடம்பெற்றவர்களைக் கெளரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் அவ்வாறு கூறினார்.
தெரிந்த முகங்கள் நிறைந்த குடும்ப நிகழ்ச்சிக்கு வந்ததுபோல உணர்வதாகக் கூறிய திரு தினேஷ், கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் ஒரு நாடாக வலிமைபெறுமா என்ற ஐயப்பாடு நிலவியபோதும் இந்தியச் சமூகம் உட்பட எல்லாச் சமூகங்களும் முன்வந்து சிங்கப்பூரை இன்றைய நிலைக்கு மேம்படுத்தியதாகத் திரு தினேஷ் தமது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் தொடக்க உரையை ஆற்றிய விருதின் ஏற்பாட்டாளர் எஸ். ஏ நாதன், வழக்கமாக ஈராண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த விருது, இதற்கு முன்னர் 2024ல் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
“ இருந்தபோதும் சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டுநிறைவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த விருது நிகழ்ச்சி நடத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
2019ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூரின் புகழ்பெற்ற இந்தியர்கள் பட்டியல், பல்வேறு துறைகளில் பங்காற்றிய சிங்கப்பூர் இந்தியர்களை அங்கீகரிக்கிறது. இதுவரை 140க்கும் அதிகமானோர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தூதர் கிஷோர் மஹ்புபானி, சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ரவி மேனன், சிங்கப்பூரின் முதல் இந்தியப் பெண் தூதர் ஜெயலக்ஷ்மி முகைதீன், தூதர் சந்திரதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், மருத்துவப் பேராசிரியர் கோபாலகிருஷ்ணகோன், நல்லிணக்கத் தலைவர் அமீரலி அப்டியலி, சிங்கப்பூரின் முதல் இந்தியப் பெண் ஒலிம்பிக் சாதனையாளர் ஜெனட் ஜேசுதாசன், தொழிலதிபர் சட்டிந்தர் சிங் கில், சிங்கப்பூர் இந்தியர் சங்கத் தலைவர் கே தமிழ் மாறன் ஆகியோர் நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மறைந்த சாதனையாளர்களும் இந்நிகழ்ச்சியின்போது விருதின்வழி சிறப்பிக்கப்பபட்டனர். முன்னோடி மருத்துவச் சமூக ஊழியர் டெய்ஸி வைத்தியலிங்கம், உள்ளூர் இசைக்கலைஞர் டெய்ஸி தேவன், மகளிர் நல ஆர்வலர் கத்திஜுன் நிஸா சிரஜ், ஷிரின் ஃபோஸ்டார், கே சுஜாதா ஆகியோரும் சிறப்பிக்கப்பட்டனர்.
இந்தியப் பழம்பெரும் தலைவர் மகாத்மா காந்தியின் பேத்தி இலா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து நேரலைக் காணொளி வழியாக நிகழ்ச்சியில் உரையாற்றினார். சிங்கப்பூரின் பொருளியல், சமூக முன்னேற்றங்களையும் ஏற்பாட்டாளர்களின் முயற்சியையும் அவர் பாராட்டினார்.
நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு விருந்தினரான திரு விக்ரம் நாயர், சிறந்த பங்களிப்புகளைப் பற்றிய நினைவுகள் எண்ணங்களாகவே நின்றுவிடாமல் அவற்றைக் குறிப்பெடுத்து, ஆவணப்படுத்தி, சிறப்பிக்கும் நோக்கத்தை இவ்விருது கொண்டிருப்பதாகக் கூறினார்.
விருதுபெற்றவர்களில் ஒருவருமான திரு விக்ரம், தமக்குத் துணைநின்ற பலரைத் தம் உரையில் நினைவுகூர்ந்தார். தமது அரசியல் பயணத்தைப் பற்றி நினைவுகூர்ந்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இந்தியச் சமூகத்தின் பலதரப்பட்ட அனுபவங்களை அறிய முடிந்ததை எண்ணி நன்றியுணர்வுடன் இருப்பதாகக் கூறினார்.