தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தினேஷ் வாசு தாஸ் செயல்திறன் மிக்கவர்: துணைப் பிரதமர் ஹெங்

3 mins read
6f1bac8c-92d2-463b-bfd2-b608de6dd0c0
உணவு நிலையத்தில் பொதுமக்களுடன் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் திரு தினேஷ் வாசு தாஸும் கலந்துரையாடினர். - படம்: யோகிதா அன்புச்செழியன்
multi-img1 of 2

ஒரு தலைவருக்கு அடுத்து அந்தப் பொறுப்பை ஏற்பவர் குறித்துத் திட்டமிடுவது மக்கள் செயல் கட்சியின் (மசெக) செயல்முறைகளில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இந்தப் பொதுத்தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் தம்முடைய இடத்தில் களமிறங்கும் மசெக வேட்பாளரான தினேஷ் வாசு தாஸின் வெற்றியை உறுதிசெய்ய தாம் உதவ விரும்புவதாகத் திரு ஹெங் தமிழ் முரசிடம் கூறினார்.

புளோக் 16 பிடோக் சவுத் ஈரச்சந்தை, உணவு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) காலை ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி மசெக வேட்பாளர் அணிக்கு ஆதரவாக அவர்களுடன் துணைப் பிரதமர் தொகுதி உலா சென்றார்.

அரசியலில் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட திரு ஹெங் அரசியலிலிருந்து ஒய்வுபெறுகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பிடோக் வட்டாரத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராகச் பணியாற்றிய அவருக்குப் பதிலாக, ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகியான தினேஷ் வாசு தாஸ் பொதுத்தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.

பிடோக் குடியிருப்பாளர்களுடன் இதுவரை வலுவான உறவைத் தாம் வளர்த்துள்ளதாகக் கூறிய திரு ஹெங், திரு தினே‌ஷுக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்குவதில் கவனம் செலுத்தி வருவதாகச் சொன்னார்.

“தினே‌ஷ் அரசியலுக்கும் நமது குடியிருப்பாளர்களுக்கும் மிகவும் புதியவர். எனவே, அவர் இங்குள்ள குடியிருப்பாளர்களைப் பற்றியும், அவர்களுக்காக நாம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றியும் நன்கு அறிந்துகொள்வதை நான் உறுதிப்படுத்துவது முக்கியம்.

“எதிர்காலத்தில் அவர் இம்முயற்சிகளை தொடரவும், மேலும் சிறப்பாகச் செயல்படவும் நான் அவருக்கு உதவ விரும்புகிறேன்,” என்றார் திரு ஹெங்.

திரு தினேஷ் செயல்திறன் மிக்கவர், மிகவும் பொறுப்பானவர் என்றும் பாராட்டிய துணைப் பிரதமர், அவரால் தொகுதி மக்களுக்கு மட்டுமன்றி அரசாங்கத்துக்கும் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்று நம்புவதாகச் சொன்னார்.

முதல்முறையாகப் பொதுத்தேர்தலில் போட்டியிடும் திரு தினேஷ், ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் வசிப்போர் இதுவரை தம்மை அன்புடன் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

தொகுதி உலாவில் தங்களைச் சந்தித்த அனைவரும் தம்மையும் துணைப் பிரதமரையும் சிரித்த முகத்துடன் எதிர்கொண்டதாக அவர் சொன்னார்.

அதே நேரத்தில், திரு ஹெங் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் முடிவுகுறித்து சிலர் வியப்பு தெரிவித்து, அவர் இன்னும் பல ஆண்டுகள் பதவியில் தொடர்ந்து சேவை செய்வாரென எதிர்பார்த்திருந்ததாகவும் திரு தினே‌ஷ் சொன்னார்.

ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தைப் பற்றிப் பேசுகையில், பசுமையால் நிரம்பிய அதன் அழகையும், கடற்கரையோரம் அமைந்திருக்கும் அதன் துடிப்புமிக்க சுற்றுச்சூழலையும் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார். இருப்பினும், அங்கு முதியவர்களிடையே சுறுசுறுப்பான வாழ்க்‌கைமுறையை ஊக்குவிக்க மேலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

“அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கருத்தில்கொண்டு, அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், மேலும் ஆதரவு வழங்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து,” என்றார் திரு தினே‌ஷ்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் மற்ற இரண்டு மசெக வேட்பாளர்களான கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்கும் திருவாட்டி ஹஸ்லினா அப்துல் ஹலிமும் தொகுதி உலாவில் கலந்துகொண்டனர்.

அவர்கள் நால்வரும் மசெக கொடிகளையும் துண்டுப் பிரசுரங்களையும் குடியிருப்பாளர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் விநியோகித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

“துணைப் பிரதமர் ஹெங் தொடர்ந்து பல காலம் இங்குப் பணியாற்றுவார் என்று நினைத்தேன். அவர் எங்களுக்குப் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்,” என்றார் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் 10 ஆண்டுகளாக வசித்துவரும் சரிதா ராஜாராமன், 40.

இந்தப் பத்தாண்டுகளில் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் இல்லையென்றும் புதுமுக வேட்பாளராகத் திரு தினேஷ் சேர்ந்தது தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்