மக்கள் செயல் கட்சியின் (மசெக) புதுமுகங்களில் ஒருவரான தினேஷ் வாசு தாஸ், 50, மூத்தோர், பராமரிப்பாளர்கள், இளம் குடும்பங்களுக்கு ஆதரவு தர விரும்புவதாகக் கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகியான இவர், தனது பொறுப்பில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பாளரையும் குடும்பத்தையும் மேலும் நன்கு கவனித்துக்கொள்ளும் நோக்கில், சமூக சேவையாற்றுவதில் தமக்குள்ள பல ஆண்டு அனுபவத்தையும் கற்றுக்கொண்டுள்ள அம்சங்களையும் அரசியல் வாழ்க்கையிலும் உபயோகிக்க விரும்புவதாகச் சொன்னார்.
திரு வாசு, இளம் வயதில் மோசமான ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டார். அதன் காரணமாக இவர் சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆஸ்துமாவைக் கையாள திரு தினேஷ், நீச்சலில் ஈடுபட்டார். பின்னர் நீர்ப்பந்து விளையாட்டாளராகவும் நீர் விபத்துகளில் சிக்குவோரை மீட்கும் பணியாளராகவும் (lifeguard) இருந்தார்.

