சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு இன, சமய நல்லிணக்க இரவு விருந்து நிகழ்ச்சி மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 26) நடைபெற்றது.
தாய் ஹுவா குவான் மோரல் சங்கத்துடன் அதன் ஐந்து சமூகப் பங்காளிகளான சமய நல்லிணக்க அமைப்பு, யயாசன் மெண்டாக்கி, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), யூரேசியர் சங்கம், சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் ஆகியவையும் ஒன்றிணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் கருப்பொருளுடன், 1965ல் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதிலிருந்து, பல்வேறு இனங்களும் சமயங்களும் இணைந்து வாழும் நமது நாட்டின் தனித்துவமான ஒற்றுமை மரபை இந்நிகழ்ச்சி கொண்டாடியது.
ஈராயிரத்திற்கு மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொண்டார்.
அவருடன், கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சரும் கல்வி மூத்த துணை அமைச்சருமான டேவிட் நியோ, அரசாங்க அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், சமயத் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சமூக உறுப்பினர்கள் முதலியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சி கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு முன்பு அறிவார்ந்த, கல்வி சார்ந்த கலந்துரையாடலாகத் தொடங்கியது என்று நிகழ்ச்சியின் தலைவரும் தாய் ஹுவா குவான் மோரல் சங்கத்தின் தலைவருமான ஆர்டி ஹார்ட்ஜோ குறிப்பிட்டார்.
“உண்மையான ஒற்றுமை என்பது வாழப்பட வேண்டியது, உணரப்பட வேண்டியது. இன்று இந்த நிகழ்ச்சி சிங்கப்பூரின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குடும்பங்கள், இளையர்கள், மூத்தவர்கள் என அனைவரையும் ஒன்றிணைக்கும் தளமாக மாறியுள்ளது,” என்றார் அவர்.
ஒற்றுமை என்பது நம்மை வேறுபடுத்தும் அம்சங்களை அழித்துவிடுவதன்று என்றும், மாறாக, அவற்றைப் பலதரப்பினரும் மதிப்போடு ஏற்றுக்கொண்டு, கொண்டாடும் எண்ணமே ஒற்றுமையின் உண்மையான அர்த்தம் என்றும் திரு ஆர்டி சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத்தையும் சமய ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் மேடை நிகழ்ச்சிகளும் சமயங்களுக்கிடையேயான விளக்கக்காட்சிகளும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
இவ்வாண்டு நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, ‘நல்லிணக்க வெற்றியாளர்கள்’ விருது முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விருது, இனி ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும்.
முதலாவது ‘நல்லிணக்க வெற்றியாளர்’ விருது தாய் ஹுவா குவான் மோரல் சங்கத்தின் நிறுவனர் லீ கிம் சியாங்கிற்கு வழங்கப்பட்டது. சமூகத் தலைமைத்துவத்திற்கும் சமய நல்லிணக்கத்திற்கும் இவரது நீண்டகால பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இவ்விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
மேலும், சமய நல்லிணக்க அமைப்பும், யயாசன் மெண்டாக்கி, சிண்டா, யூரேசியர் சங்கம், சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் ஆகிய நான்கு சுயஉதவி அமைப்புகளும் சமூகங்களிடையே ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதில் அவற்றின் நீண்டகால முயற்சிகளுக்காக விருதுகளுடன் சிறப்பிக்கப்பட்டன.
“சிண்டா, இன்று இந்தியர்களுக்கான சுயஉதவிக் குழுவாக மட்டுமின்றி, அனைத்துச் சமூகங்களுடனும் ஒத்துழைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. ஏனென்றால், சமூக மேம்பாடு என்பது தனி இனத்திற்குச் சொந்தமானதன்று,” என்று சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், 53, கூறினார்.
அதற்குச் சான்றாக, மேற்குறித்த நான்கு சுயஉதவி அமைப்புகளும் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட துணைப்பாட மையங்களை இயக்கி வருவதை அவர் சுட்டினார்.
“மாணவர்கள் எந்த மையத்திலும் இணைந்து பயன்பெறலாம். இது இனம் சார்ந்த கட்டுப்பாடின்றி, வளங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சி,” என்றார் திரு அன்பரசு.
விருது கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், நாட்டை முன்னெடுத்துச் செல்லத் தொடர வேண்டிய பணிக்கான ஊக்குவிப்பாக அது இருக்கிறது என்றும் சொன்னார் .
“இன, சமய வேறுபாடின்றி ‘நாம் ஒருதாய்மக்கள்’ என்ற கருத்தைத் தலைமுறைகள் தாண்டி தொடர்ச்சியாகப் பரப்புவது முக்கியம். இல்லையெனில், அது நாட்டின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்,” என்று திரு அன்பரசு வலியுறுத்தினார்.
இன்று உலகம் முழுவதும் இனவாதம், போர்கள், குழப்பங்கள் தலைதூக்கியுள்ள சூழலில், இதுபோன்ற ஒற்றுமை நிகழ்ச்சிகள் பழைய, புதிய குடியிருப்பாளர்களை இணைத்து, நாட்டின் விழுமியங்களாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைத் தருவதாக அவர் மேலும் கூறினார்.