தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜனவரி முதல் சிங்கப்பூர் - மங்களூரு இடையே நேரடி விமானச் சேவை

2 mins read
65c5e683-b8ce-4af4-b02c-71293ac5029d
முதல் முறையாக சிங்கப்பூர் - மங்களூரு இடையிலான நேரடி விமானச் சேவை இது. - படம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்/ஃபேஸ்புக்

மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், சிங்கப்பூரிலிருந்து மங்களூருக்கு ஜனவரி 21ஆம் தேதி நேரடி விமானச் சேவையைத் தொடங்குகிறது.

முதல் முறையாக இரு நகரங்களுக்கும் இடையியே இடம்பெறும் நேரடி விமானச் சேவை இது என்று சாங்கி விமான நிலையக் குழுமமும் ஏர் இந்தியா எக்ஸ்பிரசும் திங்கட்கிழமை (டிசம்பர் 30) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

சிங்கப்பூர் - மங்களூரு இடையே வாரம் இரு சேவைகள் இடம்பெறும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.25 மணிக்கு சாங்கி விமான நிலையம் முனையம் 2லிருந்து விமானம் புறப்படும்.

மங்களூரிலிருந்து சிங்கப்பூர் வரும் விமானங்கள், அதே நாள்களில் உள்ளூர் நேரப்படி காலை 5.55 மணிக்குப் புறப்படும்.

விமானத்தில் உணவு, நீக்குப்போக்கான கட்டணத் தேர்வுகள், இருக்கைத் தேர்வுகளை நிறுவனம் வழங்குகிறது.

இந்தியாவின் முதன்மை விமானச் சேவையான ஏர் இந்தியாவின் மலிவுக் கட்டணச் சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏற்கெனவே சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு அன்றாடம் நேரடி விமானச் சேவைகளை வழங்குகிறது. மதுரைக்கு வாரத்தில் நான்கு நாள்களும் திருச்சிக்கு நாள்தோறும் இரு சேவைகளையும் அது வழங்குகிறது.

கர்நாடக மாநிலத்தின் முக்கியத் துறைமுக நகரமான மங்களூரு, துடிப்பான கலாசார மரபுடைமை, அழகிய கடற்கரைகள், செழிப்பான தொழில்களுக்கு பெயர்பெற்றது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையத்தளம் மூலம் தங்குமிடம், போக்குவரத்து, சுற்றுப்பயணம் உள்ளிட்ட விடுமுறைத் தொகுப்புகளைப் பயணிகள் முன்பதிவு செய்யலாம்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா உள்ளிட்ட பல முக்கிய விமான நிறுவனங்கள் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருக்கு நேரடி விமானச் சேவைகளை வழங்குகின்றன.

“புதிய சேவை, சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு அதிகரித்து வரும் இணைப்பை வலுப்படுத்துகிறது. இச்சேவை மொத்த நேரடி நகர இணைப்புகளை 18 ஆக்குகிறது,” என்று சாங்கி விமானக் குழுமத்தில் விமானப் போக்குவரத்து மையம், சரக்குப் போக்குவரத்து மேம்பாட்டின் துணைத் தலைவரான திரு லிம் சிங் கியாட் கூறினார்.

“தென்கிழக்கு ஆசியாவில் மங்களூரின் முதல் அனைத்துலக இணைப்பாக சிங்கப்பூர் இருக்கும். சுற்றுலா, வணிகப் பயணிகளை சாங்கி மூலம் எதிர்பார்க்கிறோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்