நேரடிப் பள்ளிச் சேர்க்கை: ஏறத்தாழ 6 விழுக்காட்டினர் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்

2 mins read
181bd285-7167-4c91-af0e-479039eefc93
நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் திட்டத்தைக் கல்வி அமைச்சு மறுஆய்வு செய்ய இருப்பதாகக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார். - படம்: சாவ்பாவ்

நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் (டிஎஸ்ஏ) திட்டத்தின்கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில் உயர்நிலைப்பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களில் ஏறத்தாழ 6 விழுக்காட்டினர் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் திட்டத்தைக் கல்வி அமைச்சு மறுஆய்வு செய்ய இருப்பதாக அமைச்சர் சான் தெரிவித்தார்.

நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் திட்டத்தின் மூலம் உயர்நிலைப்பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களில் ஏறத்தாழ 6 விழுக்காட்டினர் கல்வி அமைச்சின் நிதி உதவித் திட்டம் அல்லது தன்னாட்சி பள்ளி உதவித் தொகையைப் பெறுபவர்கள் என்று அக்டோபர் 15ஆம் தேதியன்று அமைச்சர் சான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவர்களது குடும்பங்களின் மொத்த மாதாந்தர வருமானம் $3,000 அல்லது அதற்கும் குறைவு.

அல்லது அவர்களது குடும்பங்களின் தனிநபர் வருமானம் $750 அல்லது அதற்கும் குறைவான தொகையாகும்.

அதுமட்டுமல்லாது, நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் திட்டத்தின்கீழ் உயர்நிலைப்பள்ளிகளில் சேரும் மாணவர்களில் சிலருக்கு அவரவர் பள்ளிகள் நிதி ஆதரவு வழங்குவதாக அமைச்சர் சான் கூறினார்.

இந்நிலையில், மூன்று அம்சங்களைக் கருத்தில்கொண்டு நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் திட்டத்தை கல்வி அமைச்சு மறுஆய்வு செய்யும் என்று திரு சான் தெரிவித்தார்.

மாணவர் மேம்பாட்டில் பள்ளிகள் கவனம் செலுத்துவதை உறுதி செய்வது, நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் திட்டத்தின்கீழ் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை தொடர்ந்து வெளிப்படையாகவும் இலக்கு சார்ந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வது, அனைவரையும் சென்றடையும் வகையில் திட்டம் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வது ஆகியவை அந்த மூன்று அம்சங்கள்.

நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் திட்டம் 2004ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

விளையாட்டு, கலைகள் போன்ற கல்வி சாராத் திறன்களைப் பயன்படுத்தி நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் திட்டத்தின்கீழ் தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த உயர்நிலைப்பள்ளிகளை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து அவற்றில் சேர்ந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்