உயர்நிலைப் பள்ளிகளுக்கும் தொடக்கக் கல்லூரிகளுக்கும் பள்ளி நேரடிச் சேர்க்கைக்கு (DSA) மே 7ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தொழில்நுட்பக் கல்விக்கழகத்திற்கு (ITE) முன்கூட்டியே விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 20ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம்.
பலதுறைத் தொழிற்கல்லூரிகளுக்கான நேரடிச் சேர்க்கைக்கு ஜூன் 2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
கல்வி அமைச்சு, மே 6ஆம் தேதி, இதன் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் தேசிய நிலைத் தேர்வுகளில் பெறும் தேர்ச்சிக்கு அப்பால், அவரவர் ஆர்வம், திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளியிலோ தொடக்கக் கல்லூரியிலோ சேர்வதற்குப் பள்ளி நேரடிச் சேர்க்கைத் திட்டம் அனுமதிப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அவர்கள் விண்ணப்பித்த பள்ளிகள் மாணவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்.
ஓர் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் 20 விழுக்காட்டு இடங்களுக்குப் பள்ளிகள் நேரடிச் சேர்க்கைத் திட்டத்தின்கீழ் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கல்வி அமைச்சு கூறியது.
இந்த ஆண்டின் பள்ளி நேரடிச் சேர்க்கை நடவடிக்கையில் 142 உயர்நிலைப் பள்ளிகளும் 20 தொடக்கக் கல்லூரிகளும் பங்கேற்கும் என்று அறிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பள்ளி நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (PSLE) அல்லது ‘ஓ’ நிலைத் தேர்வை எழுத வேண்டியது கட்டாயம்.
விண்ணப்பித்த பள்ளி அல்லது தொடக்கக் கல்லூரிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தேசிய நிலைத் தேர்வுகளை எழுதுவதற்கு முன்பாகவே, குறிப்பிடப்பட்ட தேதிக்குள் அவர்கள் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பின்னர் தேசிய நிலைத் தேர்வில் உரிய மதிப்பெண்கள் பெற்றால் மாணவர்களுக்கு அந்தப் பள்ளி அல்லது தொடக்கக் கல்லூரியில் இடம் உறுதியாகும்.
பள்ளி நேரடிச் சேர்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை ஒப்புக்கொண்ட மாணவர்கள் தேசிய நிலைத் தேர்வு முடிவுகளின்பின் நடைபெறும் கூட்டு மாணவர் சேர்க்கை நடவடிக்கையில் பங்கேற்க இயலாது.
தொடக்கப் பள்ளி மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் ‘டிஎஸ்ஏ’ விண்ணப்பத்தை www.moe.gov.sg/dsa-sec எனும் இணைய முகவரியில் மே 7ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து ஜூன் 3ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
தொடக்கக் கல்லூரிகளுக்கு நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேல்விவரங்களுக்கு www.moe.gov.sg/dsa-jc எனும் முகவரியை அல்லது தொடக்கக் கல்லூரிகளின் இணையத்தளங்களை நாடலாம்.
தொழில்நுட்பக் கல்விக்கழகத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். மேல்விவரங்களுக்கு https://www.ite.edu.sg/apply-eae என்ற இணைய முகவரியை நாடலாம்.
பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://eae.polytechnic.edu.sg எனும் இணைய முகவரியில் மேல்விவரங்களைப் பெறலாம்.

