இவ்வாண்டு தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு எழுதும் (பிஎஸ்எல்இ) மாணவர்கள், காற்பந்து விளையாட்டின்கீழ் ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் நேரடிச் சேர்க்கைக்கு (டிஎஸ்ஏ) விண்ணப்பம் செய்யலாம்.
அடுத்த ஆண்டிற்கான பள்ளி நேரடிச் சேர்க்கை நடவடிக்கைக்கு மே 6ஆம் தேதி முற்பகல் 11 மணியிலிருந்து ஜூன் 2 மாலை 4.30 மணிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என்று கல்வி அமைச்சு செவ்வாய்க்கிழமை (மே 5) அறிவித்துள்ளது.
உட்லண்ட்சில் உள்ள ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளியைப்போல், கிரெஸ்ட் பள்ளியும் செய்முறை, அனுபவ அடிப்படையிலான கற்றலை விரும்பும் மாணவர்களுக்கான சிறப்புப் பாடத்திட்டத்தை வழங்குகிறது.
முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டின்கீழ், குழு 1 அல்லது குழு 1/2 சேர்க்கைக்கு மாணவர்கள் தகுதிபெற வேண்டும். அதாவது, அவர்களின் பிஎஸ்எல்இ அடைவுநிலை 25லிருந்து 30க்குள் இருக்க வேண்டும்.
கிரெஸ்ட், ஸ்பெக்ட்ரா ஆகிய இரண்டு பள்ளிகளும் ஆங்கிலம், கணிதம் போன்ற அடிப்படைப் பாடங்களுடன், ‘ஐடிஇ’ திறன் பாடங்களையும் வழங்குகின்றன. அங்குப் பயிலும் மாணவர்கள் சிங்கப்பூர் - கேம்பிரிட்ஜ் உயர்நிலைப் பள்ளிச் சான்றிதழையும் ‘ஐடிஇ’ திறன் பாடச் சான்றிதழையும் பெறுவர்.
தொடக்கக் கல்லூரிகள்
தொடக்கக் கல்லூரிகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை நடவடிக்கையும் மே 6ஆம் தேதி தொடங்கி, ஜூன் 2ஆம் தேதி நிறைவுறும்.
ஆர்வமுள்ள மாணவர்கள் தொடக்கக் கல்லூரிகளிலேயே நேரடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விண்ணப்பக் காலம், முக்கியமான நாள்கள், சேர்க்கை நடைமுறைகள் ஆகியவை குறித்து அறிய கல்வி அமைச்சின் இணையத்தளத்தை நாடுமாறும் அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அத்துடன், ஒவ்வொரு தொடக்கக் கல்லூரியின் தேர்வு முறைகளும் வேறுபடலாம் என்பதால், அவற்றின் தனிப்பட்ட இணையத்தளங்களைப் பார்வையிடுமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உயர்நிலைப் பள்ளிகளும் தொடக்கக் கல்லூரிகளும் பள்ளி நேரடிச் சேர்க்கைமூலம் 20 விழுக்காடு வரை மாணவர்களைச் சேர்க்கலாம்.
தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐடிஇ), பலதுறைத் தொழிற்கல்லூரிகளுக்கான ஆரம்பகாலச் சேர்க்கைக்கு (இஏஇ) முறையே மே 20ஆம் தேதியிலிருந்தும் ஜூன் 1ஆம் தேதியிலிருந்தும் விண்ணப்பம் செய்யலாம்.

