கழிவறை மோசமாக இருந்த காரணத்தால் தோ பாயோ, அங் மோ கியோ, பீச் ரோட்டில் உள்ள மூன்று காப்பிக் கடைகளை ஒரே நாளில் மூட உத்தரவிடப்பட்டது.
சிங்கப்பூர் உணவு அமைப்பு, மூன்று காப்பிக் கடைகளின் உரிமத்தை மே 23ஆம் தேதியன்று தற்காலிகமாக ரத்து செய்தது.
தோ பாயோ சென்ட்ரல் புளோக் 183ல் உள்ள 183 உணவு நிலையம், அங் மோ கியோ அவென்யூ 10ல் புளோக் 443ல் உள்ள கோப்பி சோ, பீச் ரோடு புளோக் 1ல் உள்ள பனானா எஃப்&பி ஆகியன அந்த மூன்று காப்பிக் கடைகள்.
மூன்று காப்பிக் கடைகளும் 12 மாதங்களுக்குள் 12 தண்டப் புள்ளிகளைப் பெற்றதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு, கழிவறையை சுத்தமாக வைத்திருக்க தவறியதற்கும் பழுதுபார்த்து நல்ல நிலையில் வைத்திருக்க தவறியதற்கும் மொத்தம் 1,300 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 4ஆம் தேதி நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு, காப்பிக் கடைகளின் கழிவறைப் புதுப்பிப்புக்காக புதிய ஐந்து மில்லியன் வெள்ளி மானியத்தை அறிவித்தது.
காப்பிக் கடை உரிமையாளர்கள், தேசிய சுற்றுப்புற வாரியத்திடம் விண்ணப்பித்து காப்பிக்கடை கழிவறைகளைப் புதுப்பிக்கும் செலவில் 95 விழுக்காடு வரை நிதி பெற முடியும். அதிகபட்சமாக ஒவ்வொரு காப்பிக் கடையும் 50,000 வெள்ளி மானியம் பெற முடியும்.
மேலும் காப்பிக் கடை உரிமையாளர்கள், தேசிய சுற்றுப்புற வாரியத்தின் (என்இஏ) காப்பிக் கடை கழிவறையை நன்கு சுத்தம் செய்வதற்கான மானியத்தையும் பெற முடியும். இரண்டு ஆண்டு தூய்மைப்படுத்தும் ஒப்பந்த செலவில் 95 விழுக்காடு வரை இந்நிதி ஈடுகட்டுகிறது. அதிகபட்சமாக 25,000 வெள்ளி வரை இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மூலம் அறியப்படுகிறது.
“வெற்றிகரமாக மானியம் பெற்றவர்களுக்கு கூடுதல் சலுகையாக காப்பிக் கடையில் பணியாற்றும் துப்புரவாளர்களுக்கு அதே இடத்தில் கழிவறையை சுத்தம் செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது,” என்று அமைச்சு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
தேசிய சுற்றுப்புற அமைச்சு, 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இரண்டு மானியங்கள் பற்றிய முழு விவரங்களை வெளியிடவிருக்கிறது.