போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் உடற்குறையுள்ளோருக்கு மேலும் வசதிகள்

3 mins read
c4dafa1d-8f45-420e-b83a-5e58340b8c78
பேருந்து, ரயில்களில் உடற்குறையுள்ளோர் எளிதில் நடமாட வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் உடற்குறையுள்ளோருக்கு ஆதரவாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு திங்கட்கிழமை (செப்டம்பர் 16) தெரிவித்தது.

உடற்குறையுள்ளோரும் தடையில்லாமல் நடமாடி, சமூகத்திற்குப் பங்காற்றுவதற்கு ஏதுவாக இத்தகைய வசதிகள் செய்யப்படுவதாக அது கூறியது.

ஜூலை மாதம் வரை 1,700 பேருந்துகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு சக்கர நாற்காலிகளுக்கான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதிக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. செவிப்புலன் இல்லாதவர்களுக்கு வசதியாக அடுத்த பேருந்து நிறுத்தத்தை தெரிவிக்கும் ஒலி அறிவிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

உடற்குறையுள்ளோர் எளிதில் எட்டும் வகையில் செங்குத்து கைப்பிடிக் கம்பங்களில் ஒலி எழுப்பும் பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பேருந்துகளிலும் இத்தகைய வசதிகள் படிப்படியாக சேர்க்கப்படும்.

இந்நாள்வரை உடற்குறையுள்ளோர் தடையில்லாமல் நடமாடும் வகையில் 98 பேருந்து நிறுத்துமிடங்கள் உள்ளன. எஞ்சியவை 2025க்குள் சில பேருந்து இடங்களைத் தவிர அனைத்தும் தங்கு தடையற்ற பேருந்து நிறுத்துமிடங்களாக மாற்றப்படும்.

உடற்குறையுள்ளோருக்கு ஆதரவளிக்கவும் அவர்கள் சமூகத்திற்கு பங்காற்றும் விதமாக ‘உடற்குறையுள்ளோருக்கான பெருந்திட்டம் 2030’ (Enabling Masterplan 2030) என்ற வழிகாட்டித் திட்டத்தின்கீழ் இத்தகைய வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

2030ஆம் ஆண்டுக்குள் அதிக அக்கறையுள்ள, சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்குவது இதன் நோக்கமாகும்.

வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, சமூக வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவையும் நோக்கங்களில் அடங்கும்.

ஜூலை மாதம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதசாரிகள் கடக்கும் பாதைகளில் ‘பச்சை மனிதன் பிளஸ்’ போக்குவரத்து விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் உடற்குறையுள்ளோர் பாதையைக் கடப்பதற்கு கூடுதலாக 13 வினாடிகள் கிடைக்கும். 2027ஆம் ஆண்டுக்குள் மேலும் 1,500 பாதசாரி கடக்குமிடங்களில் இந்த வசதி சேர்க்கப்படவிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் உடற்குறையுள்ளோர் தன்னிச்சையாக நடமாடுவதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படும் ஒலியுடன் கூடிய போக்குவரத்து விளக்கு வசதிகள் அதிக பாதசாரி கடக்குமிடங்களில் ஏற்படுத்தப்படும். 2025க்குள் மொத்தம் 325 பாதசாரி கடக்குமிடங்களில் இவ்வசதி அமைக்கப்படும்.

இன்று, அனைத்து பொதுப் பேருந்துகள், ரயில்களில் சக்கர நாற்காலிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ரயில், பேருந்து நிலையங்கள் தங்கு தடையின்றி பயணம் செய்யும் வகையில் உள்ளன.

சக்கர நாற்காலி பயணிகள் எளிதாகப் பயன்படுத்துவதற்காக புதிய தலைமுறை பயணச்சீட்டு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

காது கேட்கும் கருவிகளைப் பொருத்திய பயணிகள், நிலைய ஊழியர்களுடன் பேசுவதற்காக தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் தடத்தில் உள்ள ரயில் நிலைய பயணிகளுக்கான முகப்புகளில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வருங்காலத்தில் அனைத்து எம்அர்டி நிலையங்களிலும் இந்த வசதி செய்யப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.

மேம்பட்ட போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி பரிவுமிக்க பயணக் கலாசாரமும் ‘பரிவுமிக்க எஸ்ஜி பயணிகள் குழு’ வழியாக மேம்படுத்தப்படுகிறது என்றும் அது கூறியது.

உதாரணமாக, 2023 நவம்பரில் ஜூரோங் டவுன் ஹால் பேருந்து நிலையம், ஜனவரியில் புக்கிட் பாஞ்சாங் ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து நடுவம், ஜூலையில் உட்லண்ட்ஸ் சவுத் எம்ஆர்டி நிலையம் ஆகியவற்றில் பொதுப் போக்குவரத்து தொடர்பில் உதவி தேவைப்படுவோருக்கு பயணிகள் உதவும் சேவை இடம் அமைக்கப்பட்டுள்ளதை அமைச்சு சுட்டிக்காட்டியது.

குறிப்புச் சொற்கள்