உயர்தர பங்களாக்கள் (good class bungalows) உட்பட அனைத்து தரைவீடுகளை வாங்குவோரும் அவற்றின் உரிமையாளர்களும் தங்கள் அடையாளங்களையும் குடியுரிமையையும் தெரியப்படுத்த வேண்டும்.
“பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கான விருப்பத்தைச் சட்டபூர்வமாக தெரிவித்திருந்தாலும், வீட்டை வாங்கியது தனிநபராக அல்லது நிறுவனமாக இருந்தாலும், அடையாளத்தை வெளிப்படுத்துவது கட்டாயம்,” என்று சட்ட அமைச்சு திங்கட்கிழமை (டிசம்பர் 23) தெரிவித்தது.
உயர்தர பங்களாக்கள் உட்பட தரைவீடுகளை விற்பதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாக, நில உரிமைப் பதிவகத்தில் வீட்டுரிமையில் மாற்றத்தைப் பதிவிடும்போது, வீடு வாங்குபவர்கள் தங்கள் அடையாளங்களையும் குடியுரிமையையும் தெரியப்படுத்த வேண்டும் என்று சிங்கப்பூர் நில ஆணையம் கூறுவதாக அமைச்சு சொன்னது.
இரு வாரங்களுக்கு முன்பு நான்கு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு அமைச்சு இவ்வாறு பதிலளித்தது. புளூம்பெர்க், தி எட்ஜ் சிங்கப்பூர், தி இண்டிபென்டண்ட் சிங்கப்பூர், தி ஆன்லைன் சிட்டிசன் ஆகிய அவை, சொத்து வாங்குவது குறித்து விருப்பம் தெரிவிக்காவிடில், உயர்தர பங்களாக்கள் குறித்த அரசாங்கப் பதிவேடுகள் பொதுவெளியில் கிடைப்பதில்லை என்று கூறியிருந்தன.
மேலும், அறக்கட்டளை ஏற்பாடு அல்லது செயல்படாத நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும் உயர்தர பங்களாக்கள் பரிவர்த்தனைகளில், வீடு வாங்குவோரின் அடையாளத்தை அரசாங்கத்திடம் தெரியப்படுத்த தேவையில்லை என்றும் இதனால் “கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதை எளிமையாக்கும் வழியில்” அமைச்சர்கள், பணக்காரக் குடியேறிகள் உள்ளிட்ட தரப்பினர் அத்தகைய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது என்றும் அந்த ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.
வீடு வாங்குவோரின் அடையாளங்கள் குறித்து அரசாங்கம் எந்தச் சோதனையும் செய்யாமல் உயர்தர பங்களாக்களை வாங்கும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிவதாகவும் அந்தச் செய்திகளில் கூறப்பட்டது.
வீட்டு விற்பனையில் கள்ளப் பணத்தை நல்ல பணம் ஆக்குவதை எதிர்கொள்ள சொத்து முகவர்களுக்கும் இதர சேவை வழங்குநர்களுக்கும் முதன்மைப் பொறுப்பு இருப்பதையும் அந்த ஊடகங்கள் சுட்டின.
இந்நிலையில், “இந்தப் பொய்யான அறிக்கைகள், சிங்கப்பூரில் சொத்துப் பரிவர்த்தனைகளின் வெளிப்படைத்தன்மைக்குப் பங்கம் விளைவிக்கின்றன,” என்று சட்ட அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் பொய்யுரைகள், உயர்தர பங்களா பரிவர்த்தனைகளில் அரசாங்கத்திற்கு தகவல்களை வெளிப்படுத்துவதற்கான வலுவான சட்ட கட்டமைப்பை சிங்கப்பூர் கொண்டிருக்கவில்லை, இதனால் தவறுகள் கண்டறியப்படாமல் போகலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன,” என்று அமைச்சு விவரித்தது.
சொத்து வாங்குவதற்கான விருப்பத்தைப் பதிவுசெய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, உயர்தர பங்களாக்கள் உட்பட சொத்து உரிமை, அதன் மாற்றம் குறித்த தகவல்கள் ஒருங்கிணைந்த நிலத் தகவல் சேவைத் தளத்தில் கிடைப்பதாக அமைச்சு சொன்னது.