பொதுத் தேர்தல் 2025ல் வாக்களிப்பு நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் கட்சிகள் வாக்குச் சேகரிப்பில் முனைந்துள்ளன.
வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு வாக்காளர்களிடம் தங்களுக்கான ஆதரவை வலியுறுத்தியும் எதிர்த்துப் போட்டியிடுவோரைக் குறைகூறியும் கட்சிப் பிரதிநிதிகளும் வேட்பாளர்களும் முன்வைத்த காரசாரமான விவாதங்கள் தேர்தல் களத்தை நிறைத்துள்ளன.
அதுபற்றிக் கலந்துரையாட தமிழ் முரசின் ஒளிப்பதிவுக் கூடத்திற்கு மூவர் வந்திருந்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா. தினகரன், சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ எனும் லாப நோக்கற்ற அமைப்பின் துணைத் தலைவர் முகமது அனஸ், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டம், பொருளியல் ஆகிய துறைகளில் பட்டக்கல்வி பயிலும் மாணவி கெஜ ஷ்ரையா மூவரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட கலந்துரையாடலைத் தமிழ் முரசின் உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன் வழிநடத்தினார்.
சிங்கப்பூரில் இதற்கு முந்தைய பல தேர்தல்களுக்கான பிரசாரங்களைப் பார்த்த, கேட்ட அனுபவம் உள்ளவரான திரு தினகரன், முன்னைய தேர்தல் பிரசார உத்திகளோடு இந்தத் தேர்தல் பிரசாரத்தை ஒப்பிட்டுக் கருத்துரைத்தார்.
முன்பெல்லாம் முக்கியத் தலைவர்கள் உரையாற்றும் பிரசாரக் கூட்டங்களில் மட்டுமே கூட்டம் அலைமோதும் என்று கூறிய அவர் இப்போது பலரும் உணர்ச்சிபொங்கப் பேசுவதாகக் குறிப்பிட்டார். முன்பு பல தொகுதிகளில் போட்டி இல்லாத நிலை இருந்தது என்றும் அவர் சொன்னார்.
திரு அனஸ், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதன்முறை வாக்களித்தவர். கொவிட்-19 பெருந்தொற்றுக் காலகட்டம் என்பதால் அப்போது நேரடிப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவில்லை. ஆக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடிப் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதால் தேர்தல் நேரத்துப் பரபரப்பை உணரமுடிவதாகவும் இம்முறை பிரசாரம் விறுவிறுப்பாக இருப்பதாகவும் கூறினார் அனஸ்.
முதல் முறையாக வாக்களிக்கவுள்ள குமாரி ஷ்ரையா, சிறு வயதில் ஒரு பிரசாரக் கூட்டத்தைப் பார்த்ததை நினைவுகூர்ந்தார். இப்போது வேட்பாளர்கள் அனைவருமே சமூக ஊடகங்கள் வழியாகவும் கருத்துரைக்க முடிவதைச் சுட்டிய அவர், நேரடிக் கூட்டங்கள் தேர்தல் தொடர்பான உணர்வை முழுமையாக ஏற்படுத்த வல்லவை என்றார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்களில் எந்தெந்த வேட்பாளர்களின் பிரசாரம் அவர்களைக் கவர்ந்தது என்று மூவரிடமும் கேட்கப்பட்டது.
பொதுவாகவே அனைவருமே நன்றாகப் பேசுவதாகக் கூறிய திரு தினகரன், இந்திய வேட்பாளர்களில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் அரிஃபின் ஷா, பாட்டாளிக் கட்சியின் பெரிஸ் பரமேஸ்வரி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் நல்லகருப்பன், மக்கள் செயல் கட்சியின் டாக்டர் ஹமீது ரஸாக் போன்றோர் தமிழில் நன்றாகப் பேசுவதாகக் கூறினார்.
நகைச்சுவையுடன் திரைத்துறையினரைத் தொடர்புபடுத்தும் விதமாக மசெக வேட்பாளர் ஹமீது ரசாக் பேசியதையும் கலந்துரையாடலில் நினைவுகூர்ந்தனர்.
பன்முனைப் போட்டி நிலவும் தொகுதிகளில், ஒரு விவகாரம் குறித்துப் பல்வேறு தரப்பினரின் கோணங்களை அறிந்துகொள்ள முடியும் என்றும் பின்னர் அதன் அடிப்படையில் முடிவெடுக்க முடியும் என்றும் அனஸ் குறிப்பிட்டார்.
பிரசாரக் கூட்டங்களில் தவறான சொற்கள் பேசப்படுவது வெற்றி வாய்ப்பில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் கலந்துரையாடலில் பேசப்பட்டது. பின்னர் மன்னிப்பு கேட்டாலும் அந்தச் சொல் மனத்தில் தங்கிவிடும் என்றார் ஷ்ரையா.
பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் நேரத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது பற்றிக் கருத்துரைத்த திரு தினகரன், குறைசொல்வதை விடுத்து செலவுக் குறைப்புக்கான வழிகளைச் சொல்வது நல்லது என்று கூறினார்.
உலகச் சூழல் நிச்சயமற்றதாக நிலவும் வேளையில், பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க வகைசெய்யும்படி ஆளும் மக்கள் செயல் கட்சி தனது பிரசாரங்களில் வாக்காளர்களைக் கேட்டுக்கொள்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் கூடுதலான எதிர்க்குரல்கள் வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
இதுபற்றிக் கருத்துரைக்கையில், அரசாங்கம் மக்களின் பேராதரவைப் பெறுவது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் என்றும் கொள்கைகள் தொடர்பில் எதிர்த்தரப்பு முன்வைத்தாலும் நியாயமான பரிந்துரைகளாக இருந்தால் அவை பரிசீலிக்கப்படும் என்பதையும் பொதுமக்களிடமிருந்தும்கூட அரசாங்கம் கருத்தறிவதையும் சுட்டிக்காட்டப்பட்டது.
குறை சொல்வதோடு நின்றுவிடாமல் அதற்கான சரியான தீர்வுகளை முன்வைப்பதும் அவற்றைச் சாத்தியமாக்குவதும் அவசியம் என்பதை மூவரும் ஒப்புக்கொண்டனர்.