பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட எல்லைத் தாண்டிய நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றக் கட்டமைப்பை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 27) தெரிவித்துள்ளது.
ஜனவரி 3ஆம் தேதியன்று பாசிர் பாஞ்சாங் ஸ்கேனிங் நிலையத்தில் 509 கிலோ கஞ்சாவை ஏற்றி வந்த 20 அடி நீளமுள்ள கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் போதைப்பொருள் சிங்கப்பூர் வழியாக பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட இருந்ததாக சிஎன்பியின் விசாரணையில் தெரியவந்தது.
இதன்பிறகு, போதைப்பொருள் குற்றக் கட்டமைப்பை ஒழிப்பதற்கும் அதன் செயல்படும் முறையை அம்பலப்படுத்துவதற்கும் மூன்று பிரிட்டிஷ் அமைப்புகளுடன் இணைந்து எல்லைத் தாண்டிய நடவடிக்கையை சிஎன்பி தொடங்கியது.
இந்த நடவடிக்கையானது போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை சீர்குலைத்ததாகவும் பிரிட்டனில் பேரளவிலான போதைப்பொருள்கள் மேலும் விநியோகிக்கப்படுவதை தடுத்துள்ளதாகவும் சிஎன்பி தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 25ஆம் தேதியன்று பிரிட்டனுக்குச் சென்ற வேறொரு கொள்கலனிலிருந்து 412 கிலோ கஞ்சாவை பிரிட்டிஷ் அதிகாரிகள் பின்னர் பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து, நடந்த நடவடிக்கையில் கூடுதல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காகப் பிரிட்டனில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய கூடுதல் நபர்களைக் கண்டறிய பிரிட்டிஷ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“நெருக்கமான அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், நாங்களும் இங்கிலாந்து சட்ட அமலாக்கத் துறையினரும் எங்கள் சமூகங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தல் கட்டமைப்புக்கு பெரும் அடியைக் கொடுத்துள்ளோம்” என்று சிஎன்பியின் செயல்பாடுகளுக்கான துணை இயக்குநரான உதவி ஆணையர் ஆரோன் டாங் கூறினார்.
“நீங்கள் எங்கள் எல்லைகளுக்குள் செயல்பட்டாலும் சரி, அல்லது அதற்கு அப்பால் செயல்பட்டாலும் சரி, நாங்கள் உங்களை இடைவிடாது பின்தொடர்வோம்.
தொடர்புடைய செய்திகள்
“அனைத்துலகச் சட்ட அமலாக்க அமைப்புகளுடனான எங்கள் கூட்டுறவானது, இந்தக் கொடிய பொருள்களை விற்பனை செய்பவர்களுக்கு எந்தப் பாதுகாப்பான புகலிடமும் இல்லை என்பதை உறுதி செய்கிறது.
“அனைத்து போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இது ஒரு தெளிவான எச்சரிக்கையாக இருக்கட்டும். போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் கடுமையான நிலைப்பாடு உறுதியானது,” என்றார் திரு டாங்.
இத்தகைய குற்றக் கட்டமைப்புகளை ஒழிப்பதற்கும் சட்டவிரோத போதைப்பொருள்களின் கொடிய அச்சுறுத்தலிலிருந்து சிங்கப்பூர் குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் சிஎன்பி தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும் என்று அவர் கூறினார்.

