மாற்று முறைகள்வழி பூசல்களுக்குத் தீர்வுகாண்பதற்கான (ஏடிஆர்) தளங்கள், வர்த்தகங்களுக்குத் தொடர்ந்து ஆக்கபூர்வமானவையாக விளங்க உருமாறவேண்டும் என்று சட்ட, போக்குவரத்து அமைச்சுகளுக்கான துணை அமைச்சர் முரளி பிள்ளை கூறியுள்ளார்.
அப்போதுதான் நிலையற்ற உலகச் சூழலில் அத்தகைய தளங்களால் நிலைத்தன்மையையும் சட்ட ஒழுங்கையும் வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். வியாழக்கிழமை (மே 22) நடைபெற்ற ஏடிஆர் மாநாட்டில் திரு முரளி பேசினார்.
சட்ட ஒழுங்கைப் பின்பற்றுவது, புத்தாக்கத்தில் ஈடுபடுவது, பாங்காளித்துவங்களை உருவாக்குவது ஆகிய மூன்று வழிமுறைகளின் வாயிலாக சிங்கப்பூர் சிக்கலான, பன்முகத்தன்மை கொண்ட உலகச் சூழலைக் கையாள முயற்சி செய்வதாக திரு முரளி குறிப்பிட்டார்.
சட்ட ஒழுங்கைப் பொறுத்தவரை பலதரப்பு அணுகுமுறைக்கு (multilarteralism) சிங்கப்பூர் வலுவான ஆதரவு தருவதாக அவர் சொன்னார். நியூயார்க் மாநாட்டு ஒப்பந்தம், சிங்கப்பூர் சமரச மாநாட்டு ஒப்பந்தம் (New York Convention, Singapore Convention on Mediation) உள்ளிட்ட முக்கிய அனைத்துலக ஒப்பந்தங்களில் சிங்கப்பூர் கையெழுத்திட்டிருப்பதை அவர் உதாரணமாகச் சுட்டினார்.
சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம், லாஏஷியா ஆகியவை ஏற்பாடு செய்த ஏடிஆர் மாநாடு பென் பசிபிக் சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் திரு முரளி, உலகத் தேவைகளைப் பூர்த்திசெய்ய சிங்கப்பூர் தொடர்ந்து புத்தாக்க முயற்சிகளை மேற்கொண்டு, மேம்பட்டு, கூடுதல் சிறந்த வழிகளை உருவாக்கவேண்டும் என்று அவர் விவரித்தார்.
அனைத்துலக மேடையில் உள்ள நடைமுறைகளுக்கும் மேம்பாடுகளுக்கும் ஏற்ப சிங்கப்பூரின் ஏடிஆர் சூழலை நிலைநாட்டுவதற்குக் கட்டண ஒப்பந்தங்களுக்கான கட்டமைப்பை அறிமுகப்படுத்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக திரு முரளி தெரிவித்தார். சிங்கப்பூர் அனைத்துலக சமரச நிலையம் (எஸ்ஐஎம்சி) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது; அது சமரசத்துக்கான செயற்கை நுண்ணறிவுச் சேவையைப் பயன்படுத்துவதாக திரு முரளி விளக்கினார்.
பூசல்கள், அனைத்துலக அம்சங்களைச் சார்ந்தவையாக இருப்பதால் தாங்கள் தனிமையில் இயங்க முடியாது என்பதை சிங்கப்பூர் உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை சட்ட அமைச்சு, மற்ற நாடுகளின் சட்ட அமைச்சுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதாக திரு முரளி தெரிவித்தார். மேலும், சிங்கப்பூரின் ஏடிஆர் நிலையங்கள், மற்ற நாடுகளின் வர்த்தக அமைப்புகள், சட்டப் பள்ளிகள் உள்ளிட்டவற்றுடன் இணைந்து செயல்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.