தாயாரைத் தந்தை கொடுமை செய்ததைக் கண்ட மார்க்கஸ் (உண்மைப் பெயரன்று) பிறரைத் துன்புறுத்துபவராகத் திகழப்போவதில்லை என உறுதி பூண்டார். ஆனால் அவரே, சொந்த மனைவியால் துன்புறுத்தப்படுவார் என எதிர்பார்க்கவில்லை.
நாற்பது வயது மதிக்கத்தக்க மார்க், மனைவியால் அடிக்கப்பட்டதாகக் கூறுகிறார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக, குடும்பத்துடனும் நண்பர்களுடனும் தொடர்பு கொள்வதை நிறுத்தும்படியும் அவரது மனைவி நெருக்குதல் கொடுத்து வந்தார். இறுதியில் அவர்கள் தங்கள் திருமணத்தை முறித்தனர்.
வாழ்க்கைத் துணையாக இருப்பவர்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் 2024ல் புகார் செய்யப்பட்டன. புதிய சம்பவங்களின் எண்ணிக்கை ஆறு விழுக்காடாக 2,136க்கு உயர்ந்தது. 2023ல் அந்த எண்ணிக்கை 2,008 ஆக இருந்தது.
பாலின அடிப்படையில் இந்தச் சம்பவங்களின் எண்ணிக்கையைச் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிடவில்லை.
2021க்கும் 2024க்கும் இடையே தனிப்பட்ட பாதுகாப்பு உத்தரவுக்காக விண்ணப்பித்தோரில் 75 விழுக்காட்டினர் பெண்கள் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆண்கள் குறைவான எண்ணிக்கையில் உதவியை நாடுகின்றனர். இருந்தபோதும் இதனால் அவர்கள் வதைக்கு இலக்காவில்லை எனச் சொல்ல முடியாது. சமுதாய எதிர்பார்ப்புகளாலும் பாகுபாடு காணும் எண்ணப்போக்குகளாலும் சிலர் தாங்கள் துன்புறுத்தப்படுவதை அறியாமலோ அறிந்தும் பேசாமலோ இருக்கின்றனர், என்று அவர் கூறினார்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்வதாக ‘த அதர் கிளினிக்’ அமைப்பைச் சேர்ந்த மனநல ஆலோசகர் யாஸ்மின் நியோ தெரிவித்தார். அது குறித்த விவரங்கள் போதிய அளவில் வெளியிடப்படவில்லை என்றும் அவர் கருதுகிறார்.
பல நேரங்களில் ஆடவர்கள், பிரச்சினைகளைத் தாங்குவதற்கும், மற்றவர்களுக்குச் சம்பாதிப்பதற்கும் கடமைப்பட்டுள்ளதாகக் கற்பிக்கப்படுகின்றனர். ஏளனத்திற்கு ஆளாவதாக அஞ்சுகின்றனர். அல்லது, குற்றம் இழைக்கப்பட்ட தாங்களே குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படக்கூடும் என அவர்கள் பயப்படக்கூடும். இதனால் பலர் அமைதியில் வெம்பிப்போகின்றனர், என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட ஆண்கள், தங்களை நாடலாம் என்று அவேர் அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் பாரதி மனோகரன் தெரிவித்தார்.
யார் செய்தாலும் துன்புறுத்தல் துன்புறுத்தல்தான் என்பதைச் சுற்றியுள்ளவர்கள் கூடிநின்று சொல்வது பாதிக்கப்பட்டவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றார் திருவாட்டி பாரதி.

