கடலடிப் பணிகளுக்கான முக்குளிப்புச் சேவைகளை வழங்கும் 12 நிறுவனங்கள், ஏழு தனிநபர்களுக்கு 65 தண்டனை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதன் காரணமாக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
முக்குளிப்பு மேற்பார்வையாளர் ஒருவருக்கு வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, சம்பந்தப்பட்ட 12 நிறுவனங்களுக்கும் ஏழு தனிநபர்களுக்கும் மொத்தம் 13,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது ஆகியவை விதிக்கப்பட்ட தண்டனை உத்தரவுகளில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையமும் இணைந்து சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொண்ட முறியடிப்பு நடவடிக்கையில் அத்தரப்பினர் முக்குளிப்பு விதிமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கடலடிப் பணிகளுக்காக முக்குளிப்புச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், நடைமுறை விதிமுறைகளைப் பின்பற்றி நடந்துகொள்ளவேண்டும் என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் அவை பின்பற்றப்படவேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியது.
மேலும், தேவைப்படும் சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு எடுத்துரைத்தது.