மலேசியாவிலிருந்து ‘பக் குவா’ எனப்படும் வாட்டிய பன்றி இறைச்சித் துண்டுகளைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவரக்கூடாது என்பதைச் சிங்கப்பூர் உணவு அமைப்பு பொதுமக்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.
இப்போதைய விதிமுறைகளின்படி, பயணிகள் தங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மலேசியாவிலிருந்து பன்றியிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற இறைச்சி வகைகளைக் கொண்டுவர அனுமதியில்லை என்று உணவு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜோகூரிலிருந்து பக் குவாவைக் கொண்டுவருவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்த பதிவுகள் ஃபேஸ்புக்கில் அண்மையில் பகிரப்பட்டன.
சிங்கப்பூர் சுங்கத்துறை சோதனைச்சாவடியில், 500 ரிங்கிட் (S$150) மதிப்பிலான பக் குவாவைக் குப்பையில் போடவேண்டியதாகிவிட்டதாகக் கூறி, சமூக ஊடகப் பயனர் ஒருவர் வருத்தப்பட்டிருந்தார்.
வேறு சிலரும் இறைச்சிப் பொருள்களைத் தூக்கிவீசும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக இன்னொருவர் கூறியிருந்தார்.
ஜனவரி 8ஆம் தேதி உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, விதிமுறைகள் தளர்த்தப்பட்டுவிட்டதாக நினைத்தோம் என்று சிலர் பதிவிட்டிருந்தனர்.
இவற்றைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை (ஜனவரி 18) ஃபேஸ்புக் பதிவு ஒன்றின்மூலம், இன்னும் அவ்விதி தளர்த்தப்படவில்லை என்பதை உணவு அமைப்பு நினைவூட்டியது.
புதிய சட்டத்தின்படி, குடியிருப்பாளர்களும் சுற்றுப்பயணிகளும் பல்வேறு நாடுகளிலிருந்து கூடுதலான அளவில் இறைச்சி உணவுகளைக் கொண்டுவர இயலும். ஆனால், திருத்தப்பட்ட வரம்பு அமல்படுத்தப்படும் தேதி பின்னரே அறிவிக்கப்படும் என்று இம்மாதம் 10ஆம் தேதியன்று ஃபேஸ்புக் மூலம் உணவு அமைப்பு தெரிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இப்போதைக்கு ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற அனுமதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஒருவர் ஐந்து கிலோவரை வாட்டிய பன்றியிறைச்சித் துண்டுகளைக் கொண்டுவரலாம்.

