காணொளி எடுத்து ஓட்டுநர்களை அவமானப்படுத்த வேண்டாம்: தொழிற்சங்கம் வேண்டுகோள்

2 mins read
aae6949b-d89c-4678-bcf5-f922d68ddff3
பேருந்து ஓட்டுநருக்கும் பயணிக்கும் இடையிலான வாக்குவாதத்தின் காணொளிப் பதிவு, டிக்டாக் தளத்தில் பதிவு செய்யப்பட்டது. - படம்:அதிரா கைர்வான்/டிக்டாக்

பேருந்து ஓட்டுநருக்கும் பயணி ஒருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தின் காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியதை அடுத்து, அதில் சம்பந்தப்பட்டோருக்குத் தொல்லை தராதபடி தேசியப் போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கம் (NTWU) பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

சனிக்கிழமை (ஜனவரி 17) ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், நடந்த அந்தச் சம்பவம் பயணிக்கும் அவரது பிள்ளைகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகச் சங்கம் குறிப்பிட்டது. இந்தச் சம்பவத்தின்போது சொல்லப்பட்ட சில வார்த்தைகள் தகாதவை என்றும் மனத்தைப் புண்படுத்தக்கூடியது என்றும் தொழிற்சங்கம் தெரிவித்தது.

இந்தச் சம்பவத்தை எஸ்பிஎஸ் டிரான்சிட் நன்கு ஆராய்ந்ததாகவும், சிசிடிவி காணொளி வழியாக இருவருக்கும் இடையிலான உரையாடலை மறுஆய்வு செய்ததாகவும் தொழிற்சங்கம் கூறியது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழின் கேள்விக்குப் பதிலளித்த எஸ்பிஎஸ் டிரான்சிட் பேச்சாளர் கிரேஸ் வூ, இந்தச் சம்பவம் மறுபடியும் நடவாமல் இருக்கச் சேவை நடத்துநர், பேருந்து ஓட்டுநருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிவித்தார். “(ஓட்டுநர்) பயன்படுத்திய சொற்களுக்கு எந்தச் சாக்குபோக்கும் கிடையாது. பேருந்து ஓட்டுநருக்குப் பொருந்தாத சொற்கள் அவை,” என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட பேருந்துப் பயணி அதிரா கைர்வான், சம்பவக் காணொளியை அதே நாளில் டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்தார். அன்றிலிருந்து 137,000முறைக்கும் மேல் காணப்பட்ட அந்தப் பதிவு, 10,000க்கும் அதிகமான லைக்குகளைக் குவித்தது.

பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த நேரத்தில், சேவை 145ன் கதவுகள் தம்மீதும் தள்ளுவண்டியில் அமர்ந்திருந்த தம் பிள்ளைகள் மீதும் திடீரென மூடியதாக அந்த மாது பேருந்து ஓட்டுநரிடம் கூறியது காணொளியில் பதிவானது.

சரியான இடத்தில் பயணிகளை இறக்கிவிடாமல், ஓட்டுநர் சற்றுத் தள்ளிப் பேருந்தை நிறுத்தினார். இருவருக்கும் இடையிலான பேச்சு மோசமடைய, ஓட்டுநர் ஆபாசமாகப் பேசத் தொடங்கினார். இத்தகைய நடத்தை, பேருந்து நிறுவனத்தின் பணியாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் சேவைத் தரநிலைகளுக்குப் புறம்பானது என வலியுறுத்திய திருவாட்டி வூ, இதற்காகப் பயணியிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் கூறினார்.

பொதுப் பேருந்து கட்டமைப்பு முறைக்குள்ளேயே பயணிகள் தங்கள் வருத்தங்களைப் பகிர்வதற்கான வழிமுறைகள் இருப்பதால், இதுபோன்ற காணொளிகளை வெளியிட்டு யாரையும் அவமானப்படுத்த வேண்டாம் என்று என்டிடபிள்யூ கேட்டுக்கொண்டது. போக்குவரத்து ஊழியர்கள் பலர் பெற்றோர்களாகவும் உள்ளனர்; இணையத் தொல்லை எல்லோரது குடும்பங்களையும் பாதிக்கும் என்று அந்தத் தொழிற்சங்கம் கூறியது.

குறிப்புச் சொற்கள்