விலங்குநல ஆய்வு மற்றும் கல்வி அமைப்பு (ACRES), வெளி நாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் பாம்புகளை வாங்கி வளர்க்கவேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சீன நாள்காட்டியின்படி இது பாம்பு ஆண்டு என்பதால் பிறரின் தூண்டுதலின் பேரில் அவ்வாறு செய்யவேண்டாம் என்று அது கூறியது.
அந்த அமைப்பின் விலங்குகளுக்கு எதிரான குற்றச்செயல் புலனாய்வுப் பிரிவிற்குச் (ACIU) சென்ற ஆண்டு (2024) சட்டவிரோதமாகப் பாம்புகளை வளர்த்தல், விற்பனை செய்தல் ஆகியவை குறித்து 15 ரகசியத் தகவல்கள் கிடைத்ததாக அது கூறியது. ஒப்புநோக்க 2023ஆம் ஆண்டு நான்கு புகார்கள் பதிவாயின.
இத்தகைய மேலும் பல குற்றச்செயல்கள் கண்டுபிடிக்கப் படாமலோ புகாரளிக்கப்படாமலோ இருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சீன நாள்காட்டியில் இடம்பெறும் விலங்குகளை அந்தந்த ஆண்டு பிறக்கும்போது வாங்கி, செல்லப் பிராணிகளாக வளர்க்கும் போக்கு நிலவுகிறது. ஆனால் அந்த ஆண்டு முடிவடைந்த பிறகோ அல்லது உரிமையாளர்களுக்குச் சலிப்பு ஏற்படும்போதோ அவை கைவிடப்படுவதுமுண்டு.
சீனக் கலாசாரத்தில் பாம்பு வளமையைக் குறிக்கிறது. நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதாகவும் கருதப்படுகிறது. எனவே, சிங்கப்பூரில் பாம்புகளை வளர்க்க அனுமதியில்லை என்ற நிலையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்து வளர்க்கச் சிலர் முற்படலாம் என்பதை வல்லுநர்கள் சுட்டினர்.
கடந்த முறை, சீன நாள்காட்டியின் பாம்பு ஆண்டான 2013ஆம் ஆண்டில் பலரும் இத்தகைய பாம்புகளைக் கைவிடும் சம்பவங்கள் அதிகரித்தன என்று ‘ஏக்கர்ஸ்’ கூறியது. அவ்வாறு டாக்சி ஒன்றில் கைவிடப்பட்ட ‘லெவா’ எனும் பாம்பை அமைப்பு இன்னும் பராமரித்துவருவதாகக் கூறப்பட்டது. அது, ‘பால் பைத்தன்’ எனப்படும் ஆப்பிரிக்க நாட்டு மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது.

