வரும் 2025 ஜனவரி முதல் தேதியிலிருந்து அதிகமான உணவகங்கள், செல்லப்பிராணிகளை அனுமதிக்கும் என்றாலும், பூனைகள், முயல்கள் அல்லது சிறிய விலங்குகளை உடன் அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் (எஸ்பிசிஏ) அறிவுறுத்தியுள்ளது.
“அவை எளிதில் மன உளைச்சலுக்கு உள்ளாகிவிடும், அதனால் விரைவாக தப்பி விடலாம்” என்று விலங்கு நல தொண்டு நிறுவனம் டிசம்பர் 12 அன்று ஒரு முகநூல் பதிவில் கூறியது.
செல்லப்பிராணி உணவை பரிமாறாத உணவகங்களில் புத்தாண்டிலிருந்து உணவு உண்போர் தங்கள் செல்லப்பிராணிகளுடன் வெளியில் அமர்ந்து உண்ண அனுமதிக்கப்படுவர். அவை அதற்கான உரிமம் பெறத் தேவையில்லை என்று டிசம்பர் 2 அன்று சிங்கப்பூர் உணவு அமைப்பு அறிவித்தது.
அதைத்தொடர்ந்து எஸ்பிசிஏ வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அதில், தங்கள் செல்லப்பிராணிக்கு கூட்டம், குழந்தைகள், பிற விலங்குகள் உள்ள இடம் ஏற்றதா, அவை வெளியே செல்வதை விரும்புமா என்பதை முதலில் பரிசீலிக்குமாறு வலியுறுத்தியது.
உரிமையாளர்கள் வானிலையையும் சரிபார்க்க வேண்டும். வெப்பமான நாட்களில், மோசமான காற்றோட்டம் அல்லது சூடான மேற்பரப்பு செல்லப்பிராணிகளுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில், சில செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் வெளியே செல்லத் திட்டமிடத் தொடங்கலாம், ஆனால் அவர்களின் உற்சாகத்தில், அவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளின் “நல்வாழ்வை கருத்தில்கொள்வதை மறக்கக்கூடும் என்று எஸ்பிசிஏ -இன்நிர்வாக இயக்குனர் ஆர்த்தி சங்கர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.
“விலங்கு நலனுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம்,” என்றார் அவர்.