இறப்புச் சான்றிதழ்களில் தவறான தகவல்களை அளித்த மருத்துவர் பணி நீக்கம்

இறப்புச் சான்றிதழ்களில் தவறான தகவல்களை அளித்த மருத்துவர் பணி நீக்கம்

2 mins read
888d3e73-fe13-4dff-8730-788f10537e21
தொழில்முறை ஒழுங்கீனம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளில் டாக்டர் செபஸ்டியன் குவான் யான் ஹார் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உண்மையில் மூன்று பேரின் நல்லுடல்களைத் தான் நேரில் பரிசோதிக்காத நிலையில், மின்னணு மரணச் சான்றிதழ்களில் அவ்வாறு செய்ததாகப் பொய்யுரைத்த மருத்துவர் ஒருவர், திங்கட்கிழமை (ஜூலை 6) மருத்துவர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டார்.

இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதையே பிரதான தொழிலாகக் கொண்டிருந்த, மருந்தகம் எதையும் நடத்தாத செபஸ்டியன் குவான் யான் ஹாவ் என்பவருக்கு, சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் ஒழுங்குமுறைத் தீர்ப்பாயம் 2025ஆம் ஆண்டில் முதலில் மூன்றாண்டு கால பணியிடைநீக்கத்தை வழங்கியது.

தொழில்முறை ஒழுங்கீனம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். அவற்றில் மூன்று, இறந்தவர்களின் நல்லுடல்களைத் தாம் பரிசோதித்ததாக அவர் அளித்த பொய்யான தகவல்கள் தொடர்பானவை. மற்றொன்று, போதுமான மருத்துவச் சான்றுகள் இல்லாமல் அவர்களில் ஒருவரின் மரணத்திற்கான காரணத்தை அவர் சான்றளித்தது தொடர்பானது.

குவான் நேர்மையற்ற முறையில் செயல்பட்டதாலும் வருத்தம் காட்டாததாலும் அவரது பதிவை நீக்குவது நியாயமானது என்று வாதிட்டு, மருத்துவ மன்றம், மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், நீதிபதி டே யோங் குவாங், நீதிபதி ஹரிகுமார் நாயர் ஆகியோர் அடங்கிய நீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்டது.

தவறான அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் குவான் நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டதாகவும், அது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் திரு மேனன் கூறினார்.

இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட குவான் காட்டிய விருப்பமும், நீதிமன்றத்தின் முன் தனது செயல்களைச் சாதாரணமாகக் காட்ட அவர் மேற்கொண்ட முயற்சியும், அந்த மருத்துவரின் குணநலனில் ஒரு குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகின்றன என்று தலைமை நீதிபதி மேலும் கூறினார்.

நீதிமன்றத்தில் குவானின் வாக்குமூலத்தின்படி, அவர் 30 ஆண்டுகளாக மரணச் சான்றிதழ்களை வழங்கி வந்திருக்கிறார் .

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அவர் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மரணச் சான்றிதழ்களை வழங்கி, ஒவ்வொன்றிற்கும் $250 கட்டணம் வசூலித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மருத்துவர்பணியாளர்நீதிபதி