புற ஊதாக் கதிர்களிலிருந்து முகத்தைப் பாதுகாக்க வீட்டிற்கு வெளியே செல்லும்போது முகத்தில் சன்ஸ்கிரீன் களிம்பை ஒருசிலர் பூசிக்கொள்வது வழக்கம். ஆனால் உட்புறங்களிலும் அதைப் பூசிக்கொள்ளும்படி அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
உட்புறங்களில் உள்ள வெளிச்சம், திறன்பேசி போன்ற திரைகள் வெளியேற்றும் நீல வெளிச்சம் முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 50 வயதில் இருந்த ஓர் ஆடவரின் முகத்தில் திடீரென நிறத் திட்டுகள் அதிகமாகின. வீட்டிலிருந்து வேலை செய்த அவர், பெரும்பாலும் வெளியே செல்லவில்லை. வீட்டில் இருந்தபோதுகூட திரைச்சீலையைப் பெரும்பாலும் மூடியே வைத்திருந்தார். அப்படியிருந்தும் முகத் திட்டுகள் அதிகரித்தன.
கொவிட்-19 பெருந்தொற்றின்போது ஆடவருக்குச் சிகிச்சை அளித்தார் டாக்டர் யூஜின் டான். அப்போதுதான் ஆடவர் நீண்ட நேரம் சூம் (Zoom) வழியாக அலுவலகச் சந்திப்புகளில் கலந்துகொண்டது தெரியவந்தது.
“மெய்நிகர்க் கூட்டங்களின்போது முகத்தைப் பளிச்சென காட்ட வட்ட வடிவில் உள்ள விளக்கு ஒன்றை ஆடவர் பயன்படுத்தினார்,” என்று தேசிய தோல் நிலையத்தின் மூத்த ஆலோசகரான டாக்டர் யூஜின் சொன்னார்.
வட்ட வடிவில் உள்ள விளக்கிலிருந்து வந்த நீல வெளிச்சத்தால் ஆடவரின் முகத்தில் நிறத் திட்டுகள் அதிகம் வந்ததாக டாக்டர் யூஜின் விளக்கம் அளித்தார்.
அதேபோல ஸ்கின்ஸ்கேப் மருந்தகத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஹார்வி ஹோ, சூரியக் கதிர்களைத் தவிர்த்த 25 வயது விளம்பர அழகிக்குத் தோல் சம்பந்தப்பட்ட சிகிச்சை அளித்தார். வறண்டிருந்த அழகியின் தோல் பார்க்க மந்தமாக இருந்ததுடன் நிறத் திட்டுகள் காணப்பட்டன.
திறன்பேசிகளிலும் கணினிகளிலும் நேரலையில் அடிக்கடி வரும் அழகிகளின் முகங்கள் அதிக வெளிச்சத்தை உள்வாங்குவதாக டாக்டர் ஹோ சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
சிகிச்சைக்கு வந்த அழகி முக ஒப்பனைக்கு முன்னும் பின்னும் சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்ளும்படி டாக்டர் ஹோ அறிவுறுத்தினார்.
திரையிலிருந்து வரும் வெளிச்சத்தின் வீரியத்தைக் குறைக்கும் ஃபில்டர் (Filter) பொருளையும் பயன்படுத்தும்படி அவர் ஆலோசனை வழங்கினார்.
தோல் சுருக்கமும் பாதிப்பும் இப்போதெல்லாம் வெறும் புற ஊதாக் கதிர்களால் மட்டும் ஏற்படுவதில்லை என்ற மருத்துவர்கள், திரைகளிலிருந்து வரும் நீல வெளிச்சத்தாலும் ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.
எனவேதான் உட்புறங்களில் வேலை செய்தாலும் சன்ஸ்கிரீன் களிம்புகளை முகத்தில் பயன்படுத்தும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அலுவலகங்களில் வேலை செய்தாலும் அங்கிருக்கும் கண்ணாடிகள் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவையாக இருப்பதில்லை என்று அவர்கள் கூறினர்.
சிங்கப்பூரில் உள்ள அனைத்தும் நன்கு மூடப்பட்டிருப்பதாக மக்கள் நினைத்தாலும் சூரியக் கதிர்கள் கட்டடங்களுக்குள் நுழையத்தான் செய்கின்றன என்றார் அவர்.


