கடற்படை மருத்துவர் 34 வயதான சுவா ஜியா லாங், வரும் செப்டம்பர் மாதம், புகழ்பெற்ற நீர்நிலைகள் மூன்றை நீந்திக் கடக்கத் திட்டமிட்டுள்ளார்.
செயிண்ட் லியூக்ஸ் மருத்துவமனைக்காக 1.5 மில்லியன் டாலர் நிதி திரட்டுவது, இவரது முயற்சியின் நோக்கமாகும்.
2023ஆம் ஆண்டு நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில், 192 கிலோமீட்டர் தூரத்தை உறைபனி நீரில் நீந்திய அனுபவம் இவருக்கு உள்ளது.
திறந்தவெளி நீச்சலில் முப்பெரும் சாதனை (Triple Crown of Open Water Swimming) என்று அழைக்கப்படும் இந்தக் கடுமையான சவாலில் இறங்குபவர்கள், மூன்று நீர்நிலைகளைக் கடக்க வேண்டும்.
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவின் முக்கிய நிலப்பகுதிக்கும், சான்டா கேட்டலினா தீவுக்கும் இடையே 32.3 கிலோமீட்டர் கேட்டலினா கால்வாயைக் கடப்பது, மன்ஹாட்டன் தீவைச் சுற்றி 48.5 கிலோமீட்டர் தூரம் நீந்துவது, இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே 33.5 கிலோமீட்டர் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பது ஆகியவற்றை வெற்றிகரமாகக் கடந்து முடிக்க வேண்டும்.
மொத்தம் 114.3 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த முப்பெரும் சாதனை நீச்சலைக் காட்டிலும், திரு சுவாவின் ஹட்சன் நதி நீச்சலுக்காக அதிக தூரம் நீந்தியுள்ளார்.
“இந்தக் கால்வாய்களில் நீந்துவது எனது நீண்ட நாள் கனவு,” என்று சிங்கப்பூர் கடற்படையில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும் திரு சுவா, ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு, டாக்டர் சுவா, தசைப்பிடிப்புகளுடன் போராடிய வண்ணம், ஏழு நாட்களில் சுமார் 44 மணி நேரத்தில் ஹட்சன் நதியைக் கடந்து சாதனை படைத்தார். இந்தச் சாதனையை அடைந்த உலகின் 24ஆவது நபரும், முதல் சிங்கப்பூரரும் இவரே.
தொடர்புடைய செய்திகள்
சாதனையை முடிக்கும் முதல் சிங்கப்பூரராகத் திகழ திரு சுவா இலக்கு வைத்துள்ளார்.

