தொழில்நுட்பத் துறையில் இளநிலைப் பட்டம் பெறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் கூடுதல் ஆதரவு வழங்கும் விதமாக, பல திட்டங்களைத் தகவல், மின்னிலக்க அமைச்சு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) வெளியிட்டுள்ளது.
“முதல்முறையாக ஊழியர் அணியில் சேரும் மாணவர்களுக்கு அது சவாலாக அமையும் என்பதை அரசாங்கம் அறியும். புதிய பட்டதாரிகளை நிறுவனங்கள் பணியமர்த்துமா போன்ற சந்தேகங்கள் அவர்களுக்கு தோன்றலாம். பாரம்பரியமாக பணியாற்றுவோருக்கு சில தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் புதிய மாணவர்களை வேலைகளுக்கு தயார்படுத்தும் நோக்கத்துடன் இத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன,” என்று தகவல் மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியாட் ஹவ் கூறினார்.
சிங்கப்பூர் கணினி சங்கம் ஏற்பாட்டில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் திரு டான் சிறப்புரை ஆற்றும்போது இத்தகவலைத் தெரிவித்தார்.
தொழில்நுட்பம் சாராத நிறுவனங்களிலும் அத்துறைக்கான தேவை வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். ஏனெனில், தொழில்நுட்பத் திறன் தேவைப்படும் வேலைகளுக்கென கடந்த 2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுவரை தொழில்நுட்பம் சாரா நிறுவனங்களில் 3.9 விழுக்காடு வேலை வாய்ப்புகள் அதிகரித்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் விவரித்தார்.
தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், பலதுறை தொழிற்கல்லூரிகள் ஆகியவற்றில் தொழிற்திறனை விரைவுப்படுத்தும் கூட்டணி அமைப்பு (TIP) பல்கலைக்கழக மாணவர்களையும் அதன் பயிற்சிகளில் இனிமேல் உள்ளடக்கும்.
‘டிஐபி அலையன்ஸ் பிளஸ்’ (TIP Alliance+) என்ற புதிய திட்டத்தின்படி, தொழில்துறையைச் சேர்ந்த பங்காளிகளின் தலைமையில் பயிற்சிகள் நடத்தப்படும். அதன்படி, கட்டமைக்கப்பட்ட வாழ்க்கைத் தொழில் வாய்ப்புகள், நேரடியான வேலை அனுபவம், தொழில்துறை பங்காளித்துவம் போன்று மாணவர்களுக்கு விரிவான வகையில் அனுபவங்கள் ஏற்படுத்தப்படும்.
டிஐபி கூட்டமைப்பின் தற்போதைய நிலவரப்படி, அதில் 1,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உள்ளன. அந்தக் கூட்டமைப்பில் ஆண்டு முழுவதும் 2,300 வேலையிட பணிப் பயிற்சித் திட்டங்கள் பலதுறைக் கல்லூரிகளுடனும், தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடனும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. அத்திட்டத்தில் பல்கலைக் கழக மாணவர்களுக்கும் வாய்ப்புகள் நீட்டிக்கப்படவுள்ளது.

