அளவு விலையை வெளிப்படுத்தவுள்ள டோன் டோன்கி, ரெட்மார்ட்

அளவு விலையை வெளிப்படுத்தவுள்ள டோன் டோன்கி, ரெட்மார்ட்

விரிவுபடுத்தப்படும் அறிமுகத் திட்டத்தின்கீழ் ‘யூனிட் பிரைஸ்’ எனப்படும் அளவு விலை பார்வைக்கு வைக்கப்படும்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

28 Sep 2026 - 4:13 pm

2 mins read

கூடுதலான பேரங்காடிகள், இணையக் கடைகள், மளிகைப் பொருள்கள் ஆகியவை அறிமுகத் திட்டம் ஒன்றில் சேர்க்கப்படவுள்ளன.

தயாரிப்பு நிறுவனம், அளவு ஆகியவற்றின்படி மளிகைப் பொருள்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்துத் தகுந்த முடிவுகளை எடுக்க வாடிக்கையாளர்களுக்கு உதவுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விரிவுபடுத்தப்படும் இத்திட்டத்தில் ஏற்கெனவே பங்கேற்கும் பேரங்காடிகளுடன் டோன் டோன்கி, ரெட்மார்ட் ஆகியவையும் இனி சேர்ந்துகொள்ளும். அதன்படி, குறிப்பிட்ட சில மளிகைப் பொருள் வகைகளுக்கான அளவு விலையை அவை பார்வைக்கு வைக்கும் என்று சிங்கப்பூர்ப் போட்டி, பயனீட்டாளர் ஆணையமும் சிங்கப்பூர் பயனீட்டார் சங்கமும் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன.

சென்ற ஆண்டு தொடங்கிய அறிமுகத் திட்டம்

சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பர் மாதம் வரை அறிமுகத் திட்டம் நடப்பில் இருந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் ஃபேர்பிரைஸ், ‌ஷெங் சியோங், பிரைம் சூப்பர்மார்க்கெட், கோல்ட் ஸ்டோாரேஜ், ஜையன்ட் ஆகியவை குறிப்பிட்ட சில பொருள்களுக்கான அளவு விலையைப் பார்வைக்கு வைத்தன.

இதன் தொடர்பில் பயனீட்டாளர்கள் தெரிவித்த கருத்துகள் ஊக்கம் தரும் வகையில் இருந்ததாகவும் தயாரிப்பு நிறுவனங்கள், அளவுவாரியாக விலையை ஒப்பிட்டுப் பார்க்க இந்நடவடிக்கை அவர்களுக்கு உதவியதாகவும் சிங்கப்பூர்ப் போட்டி, பயனீட்டாளர் ஆணையம், சிங்கப்பூர் பயனீட்டார் சங்கம் இரண்டும் கூறின.

“பொருள்கள் வெவ்வேறு எடைப் பொட்டலங்களில் விற்கப்படும்போது எவை கூடுதல் மதிப்பு மிக்கவை என்பதை அறிவது சிரமமானதாக இருக்கலாம்,” என்று சிங்கப்பூர்ப் போட்டி, பயனீட்டாளர் ஆணையத்தின் தலைமை நிர்வாகி அல்வின் கோ குறிப்பிட்டார்.

“அவ்வாறு ஒப்பிட்டுப் பார்ப்பதை, அளவு விலை எளிதாக்குகிறது. அறிமுகத் திட்டம் முதலில் நடப்பில் இருந்தபோது அது பலனளித்ததாக வாடிக்கையாளர்கள் கூறியது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது,” என்றும் அவர் சொன்னார்.

கூடுதல் மளிகைப் பொருள்கள் சேர்ப்பு

விரிவுபடுத்தப்படும் திட்டத்தில் அடிக்கடி வாங்கப்படும் மேலும் சில மளிகைப் பொருள்கள் சேர்த்துக்கொள்ளப்படும். மாவு, பால், வெண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அவற்றில் அடங்கும்.

திட்டத்தை ஃபேர்பிரைஸ், பிரைம் சூப்பர்மார்க்கெட், டோன் டோன்கி, ரெட்மார்ட் ஆகியவை வரும் வியாழக்கிழமை (அக்டோபர் 1) தொடங்கி வைக்கும். கோல்ட் ஸ்டோரேஜ், ஜையன்ட் இரண்டும் நவம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து திட்டத்தில் இடம்பெறும்.

பங்கேற்கும் ஒவ்வொரு கடையும் எட்டு வாரங்களுக்கு இத்திட்டத்தை நடத்தும். திட்டத்தின்கீழ் அளவு விலையைப் பார்வைக்கு வைக்கும் முறை இணையக் கடைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது.

அந்த வகையில், ‌ஷெங் சியோங், ரெட்மார்ட் இரண்டும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில மளிகைப் பொருள்களின் அளவு விலையை தங்களின் இணைய விற்பனைத் தளங்களில் பார்வைக்கு விடும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மளிகைப் பொருள்கள்பேரங்காடிவிலைவர்த்தகம்வாடிக்கையாளர்