அமெரிக்காவில் பதவியேற்க உள்ள புதிய அதிபர் டோனல்ட் டிரம்ப் அரசு கடுமையான குடிநுழைவுக் கொள்கையை கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இதற்கென நாடு கடத்தப்படுவோர் பட்டியலில் கிட்டத்தட்ட 1.45 மில்லியன் மக்கள் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பட்டியலை அந்நாட்டு குடிநுழைவு, சுங்க அமலாக்கத் துறை தயாரித்துள்ளது. இந்தப் பட்டியலில் 18,000 இந்தியர்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினையில் அமெரிக்க குடிநுழைவுக் கொள்கைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பதில்லை என்று அமெரிக்க அரசு கூறுவதாக செய்தித் தகவல் ஒன்று கூறுகிறது.
கடந்த மூன்றாண்டுகளில் கிட்டத்தட்ட 90,000 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வரவிருந்த நிலையில் பிடிபட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் இந்தியாவின் பஞ்சாப், குஜராத், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு குறிப்பிடுகிறது.
இதில் முறையான ஆவணங்கள் இல்லாத பல இந்தியர்கள் தங்களது குடிநுழைவு நிலையை சட்டபூர்வமாக்கும் பணி பலவித சவால்கள் நிறைந்ததாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் காத்திருப்பு காலம் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள்வரை நீடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாமல் அதிகம் வருபவர்கள் இந்தியர்கள் மட்டும் அல்லர் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவை ஒட்டியுள்ள ஹாண்டுராஸ், குவாட்டமாலா போன்ற நாடுகளிலிருந்தே அதிகமானவர்கள் வருவதாக கூறப்படுகிறது. ஹாண்டுராசில் இருந்து 261,000 பேரும் குவாட்டமாலாவில் இருந்து 253,00 பேரும் முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் உள்ளதாக அறியப்படுகிறது.
ஆசியாவைப் பொறுத்தவரை சீனாவிலிருந்துதான் அதிகமானோர் முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டிலிருந்து ஏறக்குறைய 37,908 பேர் முறையான ஆவணங்களின்றி அமெரிக்காவில இருப்பதாகக் கூறப்பட்டுகிறது.

