சட்டவிரோதமாக விநியோக ஓட்டுநர்களாக வேலை செய்யும் வெளிநாட்டினரைத் தடுக்க விதிக்கப்படும் அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள் உண்மையான இணையவழி ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்று மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன் கூறியுள்ளார்.
அத்தகைய அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள் உணவுக்காகக் காத்திருக்கும் வாடிக்கையாளர்களையும் பாதிக்கலாம் என்றார் அவர்.
அதற்குப் பதிலாக, ஒரு நாளில் அடிக்கடி ஊழியர்களின் முகங்களைச் சோதித்து அடையாளம் காண்பது போன்ற நடைமுறை நீண்டகாலத் தீர்வாக அமையலாம் என்று டாக்டர் கோ குறிப்பிட்டார். வேலைக்குப் புதிதாகச் சேரும் இணையவழி ஊழியர்களின் முக அடையாளங்கள் சரிபார்க்கப்படுவது வழக்கம்.
சட்டவிரோதமாகக் கணக்கைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்தால் முக அடையாளச் சோதனையின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் டாக்டர் கோ.
விநியோகத் தளங்களில் சட்டவிரோதமாக வேலை செய்யும் வெளிநாட்டினரைத் தடுக்க பல்வேறு வழிகள் உண்டு என்பதையும் திரு கோ சுட்டினார்.
“நிறுவனங்கள்மீதும் ஊழியர்கள்மீதும் தேவையற்ற சுமையைக் கொண்டுவரும் வகையில் பல கட்டுபாடுகளை விதிப்பது ஒரு வழி. மாறாக, ஊழியர்கள்மீது பாரத்தைக் கூட்டாமல் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது மற்றொரு வழி,” என்றார் அவர்.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே இங்கு இணையவழிப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
எனினும், இணையவழி நிர்வாகிகள் விநியோகப் பணிகளைச் செய்ய மூன்றாம் தரப்பு தளவாட நிறுவனங்களின் சேவையை நாடலாம். அத்தகைய நிறுவனங்கள் உரிய வேலை அனுமதி வைத்துள்ள வெளிநாட்டினரை வேலையில் வைத்திருக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், சட்டவிரோதமாக இணையத்தள விநியோகச் சேவையில் ஈடுபடும் வெளிநாட்டினரைப் பிடிக்க சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை டாக்டர் கோ குறிப்பிட்டார்.
அத்தகைய சோதனைகளின்போது மொத்தம் 644 விநியோக ஊழியர்கள் சோதிக்கப்பட்டனர். அவர்களில் நால்வர் சட்டவிரோதமாக வேலை செய்தது அம்பலமானது. இதர 22 வெளிநாட்டினர் வேலை செய்வதற்கு உரிய அனுமதி வைத்திருந்தனர்.
எனவே, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தால் ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் அது பாதிக்கும் என்றார் டாக்டர் கோ.