கதவுக் கோளாறு; மீட்டுக்கொள்ளப்பட்ட 1,300 ‘டொயோட்டா பிரியஸ்’ கார்கள்

கதவுக் கோளாறு; மீட்டுக்கொள்ளப்பட்ட 1,300 ‘டொயோட்டா பிரியஸ்’ கார்கள்

1 mins read
372dcfbe-301f-426e-8fc4-c576f8133d7f
டொயோட்டா பிரியஸ் கார் ஒன்று. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பின்கதவில் உள்ள பிரச்சினை காரணமாகக் கிட்டத்தட்ட 1,300 டொயோட்டா பிரியஸ்கார்கள் சிங்கப்பூரில் மீட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தக் கோளாறு காரணமாகக் கார் ஓடிக்கொண்டிருக்கும்போதே பின்கதவு திறந்துகொள்ள நேரிடலாம். சிங்கப்பூரில் டொயோட்டா கார்களை விநியோகிக்கும் நிறுவனமான போர்னியோ மோட்டார்ஸ், அஞ்சல்வழி இதுகுறித்து கார் உரிமையாளர்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறது.

பெட்ரோல், மின்சாரம் இரண்டிலும் இயங்கும் டொயோட்டா பிரியஸ் காரின் பின்கதவு மின்கோளாறு காரணமாக எதிர்பாரா வேளையில் திறந்துகொள்ளும் சாத்தியம் உள்ளது என நிலப் போக்குவரத்து ஆணையத்தின் மின்சார வாகன மீட்புத் தளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. நீர் உள்ளே போவதால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது.

இப்பிரச்சினையைச் சரிசெய்ய, இடது, வலது கதவுகளின் மின்விசை அமைப்புகளை மாற்றியமைக்கவேண்டும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு போர்னியோ மோட்டார்ஸ் வெள்ளிக்கிழமை பதிலளித்தது.

கோளாற்றைச் சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கிவிட்டன. ஒரே நாளில் பிரச்சினை சரிசெய்யப்படக்கூடும்.

இதற்கு கார் உரிமையாளர்கள் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

சரிசெய்யப்படும் நாளுக்கான விவரங்கள் தெரியப்படுத்தப்படும்வரை உரிமையாளர்கள் தங்கள் கார்களைத் தொடர்ந்து ஓட்டலாம் என்று போர்னியோ மோட்டார்ஸ் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்