உணவு விநியோக நிறுவனமான டெலிவரூ (Deliveroo) சிங்கப்பூரில் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனமான டோர்டேஷ் (DoorDash) டெலிவரூவை வாங்கியது. அதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் டெலிவரூ தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது ‘டோர்டேஷ்’ தகவல் வெளியிட்டுள்ளது.
“டெலிவரூ செயலியும் அதன் சார்ந்த சேவைகளும் சிங்கப்பூரில் தொடரும். பயனீட்டாளர்கள் எப்போதும் போல் டெலிவரூ சேவையைப் பயன்படுத்தலாம். விநியோக ஊழியர்களும் அவர்களது வேலையைத் தொடரலாம்,” என்றார் ‘டோர்டேஷ்’ தலைமை நிர்வாக அதிகாரி டோனி சூ.
அமெரிக்காவில் ஆகப்பெரிய உணவு விநியோகச் செயலியாக ‘டோர்டேஷ்’ செயல்பட்டு வருகிறது.
‘டோர்டேஷ்’ கடந்த மே மாதம் டெலிவரூவை 4 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க ஒப்புக்கொண்டது. டெலிவரூ செயலி அக்டோபர் மாதத் தொடக்கத்தில் முழுமையாக வாங்கப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
‘டோர்டேஷ்’ தற்போது 40க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவையை வழங்கிவருகிறது. மாதம் கிட்டத்தட்ட 50 மில்லியன் பயனீட்டாளர்கள் அச்செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
ஐரோப்பியச் சந்தையில் ‘டோர்டேஷ்’ 2021ஆம் ஆண்டு நுழைந்தது.