ஷெங் சியோங் பேரங்காடிகளில் நீல, ஆரஞ்சு சாஸ் அட்டைதாரர்களுக்கு இரண்டு மடங்கு தள்ளுபடி

ஷெங் சியோங் பேரங்காடிகளில் நீல, ஆரஞ்சு சாஸ் அட்டைதாரர்களுக்கு இரண்டு மடங்கு தள்ளுபடி

2 mins read
d5bbd3dd-f0f3-461f-b01f-ce6cca58374f
ஷெங் சியோங்கில் பொருள்களை வாங்குபவர்களுக்கு பணத்தை மிச்சப்படுத்தும் அளவுக்கு கழிவுகள் வழங்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஷெங் சியோங்

ஜூன் மாதம் முழுவதும் ஷெங் சியோங் பேரங்காடிகளின் 88 கிளைகளிலும் வருமானம் குறைந்த சிங்கப்பூரர்களுக்கு இரண்டு மடங்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அந்நிறுவனம் வியாழக்கிழமை (மே 28) வெளியிட்ட அறிக்கையில் தீவு முழுவதும் உள்ள 88 ஷெங் சியோங் பேரங்காடிகளில் பொருள்களை வாங்கினால் நீல, ஆரஞ்சு சமூக சுகாதார உதவித் திட்ட (சாஸ்) அட்டைதாரர்கள் எட்டு விழுக்காடு வரை விலைக்கழிவு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதாவது, 4 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காட்டுக்கு விலைக்கழிவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீல நிற சாஸ் அட்டைதாரர்கள் வியாழக்கிழமைகளிலும் ஆரஞ்சு நிற சாஸ் அட்டைதாரர்கள் வெள்ளிக்கிழமைகளிலும் இரண்டு மடங்கு கழிவுகளைப் பெறலாம்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நீல சாஸ் அட்டைதாரர்களுக்கு முதல் முறையாக விலைக்கழிவை ஷெங் சியோங் அறிமுகப்படுத்தியது. ஆரஞ்சு அட்டைதாரர்களுக்கு இவ்வாண்டு ஜனவரியில் அது தள்ளுபடிகளைக் கொண்டு வந்தது.

இந்தத் திட்டம் இவ்வாண்டு ஜூன் மாதம் முடிவடைய இருந்த நிலையில் இவ்வாண்டு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாக ஷெங் சியோங் அறிவித்துள்ளது.

இதன்படி ஜூன் மாதம் முழுவதும் இரண்டு மடங்கு (8%) கழிவு கிடைக்கும். அதன் பிறகு ஜூலையிலிருந்து இவ்வாண்டு டிசம்பர் வரை வழக்கமான நான்கு விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று அறிக்கையில் அது கூறியது.

“அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் குடும்பங்களின் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க உதவும் ஷெங் சியோங்கின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக கழிவுகள் வழங்கப்படுகின்றன,” என்று ஷெங் சியோங் தெரிவித்தது.

அரசாங்கமும் செலவுகளைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் வழங்கவிருந்த $500 சமூக மேம்பாட்டுத் திட்ட (சிடிசி) பற்றுச்சீட்டுகளை இவ்வாண்டு ஜூன் மாதத்திலேயே வழங்க முடிவு செய்துள்ளது.

ஷெங் சியோங், மத்திய கிழக்கு பூசலால் அதிகரித்துள்ள செலவுகளில் சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் சிடிசி பற்றுச்சீட்டு பயனாளர்களுக்கு ஜூன் 1 முதல் ஜூலை 6 வரை சிறப்புச் சலுகைகளையும் அறிமுகப்படுத்துகிறது.

சிடிசி பற்றுச்சீட்டைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் 20 வெள்ளிக்குப் பொருள்களை வாங்குபவர்கள், குறிப்பிட்ட சில பொருள்களுக்கு 50 விழுக்காடு வரை கழிவுகளைப் பெறலாம். முட்டை, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு இச்சலுகை பொருந்தும்.

ஷெங் சியோங் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லிம் ஹோக் சீ, “பல குடும்பங்கள் தங்களின் அன்றாடச் செலவுகளில் தொடர்ந்து கவனமாக இருப்பதை நாங்கள் அறிவோம். தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள சாஸ் அட்டைகளுக்கான கழிவு குடும்பங்களுக்கு ஆதரவாக, எங்கள் வாடிக்கையாளர்கள் செலவிடும் ஒவ்வொரு வெள்ளியையும் இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் பயன்படுத்த உதவ எங்கள் தரப்பில் எடுக்கப்பட்ட ஓர் அர்த்தமுள்ள முயற்சி,” என்றார்.

“2026 ஆம் ஆண்டு இறுதி வரை சாஸ் தள்ளுபடியை நீட்டிப்பதால் குடும்பங்கள் இந்தச் சேமிப்புகளிலிருந்து தொடர்ந்து பயனடைய முடியும்,” என்று தாம் நம்புவதாகவும் திரு லிம் குறிப்பிட்டார்.

இது மட்டுமல்லாமல் ஷெங் சியோங்கில் மூத்த குடிமக்களுக்கும் செவ்வாய், புதன்கிழமைகளில் நான்கு விழுக்காடு வரை கழிவு வழங்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்