தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மேலும் அதிகரித்தால் கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆராயப்படும்

சிங்கப்பூரில் சிக்குன்குனியா பாதிப்பு இரட்டிப்பு

1 mins read
dc7d6175-df4b-46a7-9b51-eb63117c4634
சிங்கப்பூரில் 2024ல் பதிவான ஒட்டுமொத்த சிக்குன்குனியா சம்பவங்களின் எண்ணிக்கை 15. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சிக்குன்குனியா சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ள நிலையில், அதிகாரிகள் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் 17 சிக்குன்குனியா சம்பவங்கள் பதிவானதாக தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு தெரிவித்தது.

கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் பதிவான 8 சம்பவங்களைவிட அது இரட்டிப்பு அதிகம். 2024ல் பதிவான ஒட்டுமொத்த சிக்குன்குனியா சம்பவங்களின் எண்ணிக்கை 15.

இவ்வாண்டு சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டோரில் குறைந்தது 13 பேர் ஏற்கெனவே அந்த நோய் கண்டறியப்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தவர்கள். குறைந்தது மூவர் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை.

பிப்ரவரியில் முதலில் இருவரிடம் சிக்குன்குனியா கண்டறியப்பட்டது. அதையடுத்து ஒவ்வொரு மாதமும் இருவர் பாதிக்கப்பட்டு, மே இறுதியில் ஒன்பது பேர் சிக்குன்குனியா நோய்க்கு ஆளாகினர்.

எனினும், ஜூன் மாதத்தில் அந்த எண்ணிக்கை 13ஆகவும் ஜூலையில் 16ஆகவும் கூடியது.

சிக்குன்குனியா சிங்கப்பூரில் பரவக்கூடிய புதிய தகவல்கள் கிடைத்தால் கூடுதலான பொது சுகாதார நடைமுறைகளுக்கான தேவை குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு தெரிவித்தது.

கொசுக்களால் பரவக்கூடிய சிக்குன்குனியாவால் மரணம் ஏற்படுவது அரிது. இருப்பினும், அதனால் காய்ச்சல், கடுமையான மூட்டுவலி ஆகியவற்றுடன் நீண்டகால உடற்குறைகளும் ஏற்படக்கூடும். அதற்கென தனி சிகிச்சையும் கிடையாது.

இருபது ஆண்டுகளுக்குமுன் உலக நாடுகளை அலைக்கழித்த சிக்குன்குனியா பரவல் மீண்டும் ஏற்படாமல் தடுக்க உலகச் சுகாதார நிறுவனம் அவசர அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்