துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், அரசாங்க முதலீட்டு நிறுவனமான ‘ஜிஐசி’யின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 1ஆம் தேதி அவர் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று ‘ஜிஐசி’, செப்டம்பர் 24ஆம் தேதி தெரிவித்தது.
திரு கான், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார். பிரதமர் அலுவலகத்தின் உத்திபூர்வ குழுவிற்கும் அவர் பொறுப்பேற்றுள்ளார்.
திரு கானின் பரந்த அனுபவம் முக்கியமான சொத்து ஒதுக்கீடுகளுக்கும் இதர உத்திபூர்வ முடிவுகளுக்கும் வலுச்சேர்க்கும் என்று ‘ஜிஐசி’யின் தலைமை நிர்வாகி லிம் சோ கியட் கூறினார்.
65 வயதாகும் திரு கான், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பெற்றவர். அரசாங்க சேவையில் வர்த்தக, தொழில் அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியவற்றில் அவர் தமது பணியைத் தொடங்கினார்.
1989ஆம் ஆண்டு அரசாங்க வேலையிலிருந்து விலகி, தனியார் துறையில் ‘நேட்ஸ்டீல்’ நிறுவனத்தில் இணைந்தார். பின்னர் அதன் தலைமை நிர்வாகியாகவும் 2005ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக, கல்வி, மனிதவளம், சுகாதர அமைச்சுகளில் பணியாற்றிய அவர் கடந்த மே மாதம் சிங்கப்பூரின் இரண்டு துணைப் பிரதமர்களில் ஒருவராகப் பதவியேற்றார்.

