துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியாட் தனது பணிக் காலம் முழுவதையும் சிங்கப்பூருக்கும் மக்களுக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணித்துள்ளார் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் புகழ்ந்துள்ளார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான பொதுச் சேவையில், தன்னலமற்ற, சேவை நெறிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிலைநிறுத்தினார் என்றார் பிரதமர்.
துணைப் பிரதமர் ஹெங், ‘உறுதிமிக்க தோழர்’, அவரது நட்பு ‘போற்றிப்பாதுகாக்க வேண்டியது’, சிங்கப்பூருக்குப் பரந்தளவிலான பங்களிப்புகளை வழங்கியவர் என்று செவ்வாய்க்கிழமை (மே 6) திரு ஹெங்கிற்கு எழுதிய பிரியாவிடைக் கடிதத்தில் பிரதமர் வோங் குறிப்பிட்டுள்ளார்.
“ஒவ்வொரு பணியிலும், கடுமையான உழைப்பு. அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு கொள்கையையும் துல்லியமாக அறிவதுடன், சிங்கப்பூரின் சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்க அயராது உழைத்தீர்கள்,” என்று திரு வோங் கூறினார்.
64 வயதான துணைப் பிரதமர் ஹெங், வேட்புமனுத் தாக்கல் தினமான ஏப்ரல் 23 அன்று அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதை உறுதிப்படுத்தினார்.
திரு ஹெங் 2011ல் அரசியலில் சேர்வதற்கு முன்னர், பொதுச் சேவையில் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர், வர்த்தக தொழில் அமைச்சின் நிரந்தரச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.
2011 முதல் 2015 வரை கல்வி அமைச்சராக இருந்த திரு ஹெங், எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒவ்வொரு பிள்ளையின் முழு ஆற்றலையும் திறமையையும் வளர்ப்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் என்ற பிரதமர் வோங், கல்வித் துறையில் அவரது பங்களிப்பைப் போற்றினார்.
உயர்நிலைப் பள்ளித் தரவரிசையை அகற்றுதல், பாட அடிப்படையிலான தரப்பிரிப்பை உருவாக்குதல், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகம் சிங்கப்பூர் ஐந்தாவது தன்னாட்சி பல்கலைக்கழகமாகியது, வாழ்நாள் கற்றலுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அறிமுகம் என்று அவர் மேற்கொண்ட பணிகளைப் பட்டியலிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
2015 முதல் 2021 வரை நிதி அமைச்சராக சிங்கப்பூர் நிதி வளங்களின் “நிலையான, நம்பிக்கைக்குரிய நிர்வாகி” ஆக, பொருள், சேவை வரி அதிகரிப்புக்கு திட்டமிடுதல், சிங்கா பத்திரங்களை அறிமுகப்படுத்துவது,போன்ற “கடுமையான ஆனால் தேவையான முடிவுகளை” தனது சக ஊழியர்களுடன் சேர்ந்து முன்னெடுத்தார் என்றார் பிரதமர் வோங்.
நடுத்தர குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தேவையற்ற முறையில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அதிக வரியின் தாக்கத்தைக் குறைக்க, உத்தரவாதத் தொகுப்பை திரு ஹெங் வடிவமைத்தார்.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலின்போது, 2020ல், துணைப் பிரதமர் ஹெங் “முன்னெப்போதும் இல்லாத” ஐந்து வரவுசெலவுத் திட்டங்களைச் செயல்படுத்தினார். அது உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றியது, மேலும் சிங்கப்பூர் வலுவாக மீண்டுவரத் தயாராக இருந்தது என்றார் திரு வோங்..
“அமைதியான தலைமைத்துவம், அழுத்தம் நிறைந்த நேரங்களில் கருணை, சாதாரண சிங்கப்பூரர்கள் மீதான அக்கறை ஆகியவை அந்த நிச்சயமற்ற காலங்களில் நாட்டிற்கு நிலைத்தன்மையையும் நம்பிக்கையையும் அளித்தன” என்று பிரதமர் வோங் கூறினார்.
சிங்கப்பூர் பொருளியலை மேம்படுத்துவதிலும் சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் நல்ல வாய்ப்புகளை உருவாக்குவதிலும் துணைப் பிரதமர் ஹெங் முக்கிய பங்காற்றினார். பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும், எதிர்கால பொருளியல் மன்றத்தின் தலைவராகவும், பின்னர், எதிர்கால பொருளியல் ஆலோசனைக் குழு தலைவராகவும் தொழில்துறை உருமாற்ற வரைவுத் திட்டங்களை (ஐடிஎம்எஸ்) மேற்பார்வையிட்டார் என்று பிரதமர் வோங் கூறினார்.
சீனா உடனான வருடாந்திர இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு மன்றம் இணைத் தலைமை தாங்கவும் பொது சுகாதாரம், புத்தாக்கம், பசுமை, மின்னிலக்க பொருளியல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அவர் முதலீடு செய்தார்.
தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவராக, அவர் ஆராய்ச்சி, புத்தாக்கம், தொழில் நிறுவன உத்திகளை தொழில்துறை தேவைகளுடன் இணைத்தார், அத்துடன் தேசிய முன்னுரிமைகளில் வலுவான கவனம் செலுத்துவதை உறுதி செய்தார். “இதன் விளைவாக, தொழில்நுட்பம், புத்தாக்கம், தொழில்துறைக்கான உலக-ஆசிய மையமாக சிங்கப்பூர் நிலைத்து நிற்கிறது” என்று பிரதமர் வோங் கூறினார்.
குடிமக்கள் ஈடுபாட்டின் சக்தியில் நம்பிக்கை கொண்டவரான துணைப் பிரதமர் ஹெங், நமது சிங்கப்பூர் கலந்துரையாடல் போன்ற தேசிய ஈடுபாட்டுப் பயிற்சிகளை வழிநடத்தியதைக் குறிப்பிட்டார்.
மக்கள் செயல் கட்சியில் (மசெக), முதல் உதவித் தலைமைச் செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் பணியாற்றினார்.
நாடாளுமன்ற உறுப்பினராக, சமூக உருவாக்கத்தில் துணிச்சலான, புத்தாக்கமிக்க அணுகுமுறைக்குப் பெயர் பெற்றவர். “2017ல் திறக்கப்பட்ட நமது தெம்பனிஸ் ஹப், அவரது எதிர்கால நோக்கிற்கு ஒரு சான்று,” என்று பிரதமர் வோங் கூறினார்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி பகுதியில், குடியிருப்பாளர்களின் கவலைகளைக் கேட்கவும், அவர்களை வட்டாரத் திட்டமிடுதலில் ஈடுபடுத்தவும் திரு ஹெங் மாதாந்திர உரையாடல்களை மேற்கொண்டார்.
கல்வி, நிதி அமைச்சுகளில் அமைச்சரவையில் திரு ஹெங்குடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து திரு வோங், வழிகாட்டி, தோழர் என்ற முறையில் திரு ஹெங்கின் பங்கிற்கு தனிப்பட்டமுறையில் நன்றி தெரிவித்தார்.

