பொய் சொன்னதை ஒப்புக்கொள்ள பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தன்னிடம் கேட்டுக்கொண்டிருந்தால் 2021 அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது உண்மையைச் சொல்லியிருப்பேன் என்று அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் தெரிவித்துள்ளார்.
பிரித்தம் சிங் நாடாளுமன்ற சிறப்புரைக் குழுவினர் முன்னிலையில் பொய்யுரைத்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக வியாழக்கிழமை (அக்டோபர் 17) நடைபெற்ற நான்காவது நாள் நீதிமன்ற விசாரணயின்போது அவர் இவ்வாறு கூறினார்.
2021 அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்விற்கு முந்திய நாளில் திரு சிங், பொய் கூறியதைத் தெளிவுபடுத்தக் கேட்டிருந்தால், திருவாட்டி கான் எப்படியும் தன்னைத் தயார்ப்படுத்தியிருப்பார் என்று அரசாங்க வழக்கறிஞர் சிவகுமார் ராமசாமி கூறினார்.
திரு சிங், உண்மையைக் கூறச் சொல்லியிருந்தால் தாம் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தயாரித்திருப்பேன் என்று நீதிமன்ற விசாரணையின் மூன்றாம் நாளில் திருவாட்டி கான் சொன்னதை வழக்கறிஞர் சிவகுமார் சுட்டினார்.
தாம் கூறியது பொய் எனச் சொல்லும்படி திரு சிங் கேட்டிருந்தால் 2021 நவம்பர் 1ஆம் தேதி தாம் பொய்யுரைத்ததை ஒப்புக்கொண்டதாக வெளியிட்ட அறிக்கையைப் போன்ற ஓர் அறிக்கையை அக்டோபர் 4ஆம் தேதியே தயாரித்திருப்பேன் என திருவாட்டி கான் கூறினார்.
அந்த அறிக்கையின் வரைவைப் பாட்டாளிக் கட்சித் தலைவர்களுக்கும் கட்சித் தோழர்கள் லோ பெய்யிங்கிற்கும் யுதிஷ்த்ரா நாதனுக்கும் அனுப்பியும் இருந்திருப்பேன் என அவர் கூறினார்.
“இந்த (அக்டோபர் 4) நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாகவே நாங்கள் சந்தித்திருப்போம்,” என்றார் திருவாட்டி கான்.
பாலியல் குற்றம் தொடர்பான வழக்கு ஒன்றைக் காவல்துறை முறையாகக் கையாளவில்லை என்று செங்காங் குழுத் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி கான் 2021 ஆகஸ்ட் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 25 வயதுப் பெண் ஒருவர், அது குறித்து புகாரளிக்க காவல் நிலையத்துக்குச் சென்றபோது தாமும் அவருடன் சென்றதாக திருவாட்டி கான் கூறியிருந்தார்.
அப்பெண்ணிடம் விசாரணை நடத்திய அதிகாரி, அவர் அணிந்திருந்த ஆடைகள் பற்றி முறையற்ற கருத்துகளைத் தெரிவித்ததாகவும் அவர் மதுபானம் அருந்தியிருந்ததைச் சுட்டிக்காட்டியதாகவும் திருவாட்டி கான் சொல்லியிருந்தார்.
ஆனால், இதுகுறித்து தாம் பொய் சொன்னதாக அதே ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அவர் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், அரசுத் தரப்பின் மறுவிசாரணை வியாழக்கிழமை (அக்டோபர் 17) காலை தொடங்கியதற்குமுன், திருவாட்டி கானை மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமாபோய், நீதிபதி லியூக் டானிடம் கேட்டிருந்தார்.
அதற்கு துணைத் தலைமைச் சட்ட அதிகாரி ஆங் செங் ஹோக், “இது வழக்கத்திற்கு மாறானது. குறுக்கு விசாரணை முடிந்துவிட்டது. இருந்தபோதும் ஒரு விவகாரத்தைப் பற்றியது என்றால் நான் எந்த இடரையும் ஏற்படுத்த விரும்பவில்லை,” என்றார்.
இதற்குப் பிறகு திரு ஜுமாபோய், “ஆகஸ்ட் 8 ஆம் தேதி நீங்கள் பிரித்தம் சிங்கைக் காணச் சென்றபோது, அந்தச் சந்திப்பின்போது உங்களை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிற்குக் கொண்டுசெல்வது பற்றிய எந்தப் பேச்சும் எழவில்லை என்கிறேன் - நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா மறுக்கிறீர்களா?” எனக் கேட்டார்.
திருவாட்டி கான், இதனை மறுப்பதாகப் பதிலளித்தார். அதையடுத்து நீதிமன்றம், திருவாட்டி லோ பெய் யிங்கை விசாரித்தது.