தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதர் டாக்டர் அஞ்சனி சின்ஹா; உறுதிசெய்தது செனட்

2 mins read
5d9da729-fee1-41c3-8b3d-862f205c5791
நியூயார்க்கிலும் ஃபுளோரிடாவிலும் மருத்துவராகப் பணியாற்றிய டாக்டர் அஞ்சனி சின்ஹா, டிரம்ப் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்று நம்பப்படுகிறது. - காணொளிப் படம்: அமெரிக்க செனட்

சிங்கப்பூருக்கான தனது தூதராக டாக்டர் அஞ்சனி சின்ஹாவை அமெரிக்கா உறுதிசெய்திருக்கிறது.

எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரான அவர், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் சொந்த மாநிலமான ஃபுளோரிடாவைச் சேர்ந்தவர்.

அமெரிக்க செனட் சபையில் டாக்டர் சின்ஹா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரின் நியமனங்கள் வாக்கெடுப்பின்மூலம் உறுதிசெய்யப்பட்டன. 51க்கு 47 எனும் வாக்கு எண்ணிக்கையில் நியமனங்களுக்கு ஆதரவு கிடைத்தது.

குடியரசுக் கட்சியினர், நியமனங்களை முடிவுசெய்யும் முறையை அண்மையில் மாற்றியமைத்தனர். 100 உறுப்பினர்கள் கொண்ட செனட்டில் முன்பு அவற்றை உறுதிசெய்ய அதிகப் பெரும்பான்மையாக 60 வாக்குகள் தேவைப்பட்டன. இப்போது பெரும்பான்மை இருந்தாலே போதும் என்ற நிலைக்குக் குடியரசுக் கட்சியினர் அதனை மாற்றியுள்ளனர். ஜனநாயகக் கட்சியினர் நியமனங்களை வேகமாக உறுதிசெய்த முறையைக் குறைகூறினர்.

புதிய நியமனங்களில் வேறு நாடுகளுக்கான தூதர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராகத் திரு செர்கியோ கோர் நியமிக்கப்பட்டுள்ளார். தாய்லாந்துக்கான அமெரிக்கத் தூதராகத் திரு ‌ஷான் ஓ நெய்ல் பொறுப்பேற்பார்.

சிங்கப்பூருக்கான புதிய தூதர் டாக்டர் சின்ஹா, இந்தியாவில் பிறந்தவர். அவர் திரு டிரம்ப்பின் குடும்பத்தாருக்கு நெருக்கமானவர் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி, அமெரிக்க அதிபர் தமது ‘ட்ரூத் சோ‌ஷியல்’ சமூக ஊடகத்தில் டாக்டர் சின்ஹாவின் பெயரை முன்மொழிந்திருந்தார்.

“நிதி நடுவம் என்ற முறையில் சிங்கப்பூரின் பங்கை உணர்ந்தவர் டாக்டர் சின்ஹா. உயிர் அறிவியல், சுகாதாரப் பராமரிப்புத் துறைகளில் வர்த்தகம் புரிந்த அனுபவம் உள்ளவர். இந்தக் காரணங்களால் சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதராகச் சேவையாற்றத் தகுதியானவர் அவர்,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு மே 2 அன்று செனட் வெளியுறவுக் குழுவுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அக்குழுவின் முன் ஜூலை மாதம் பேசியபோது, இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் பண்பாடு, மக்கள், விழுமியங்கள் முதலியவற்றைப் பற்றி நன்கு புரிந்துகொண்டிருப்பதாகவும் மதிப்பதாகவும் டாக்டர் சின்ஹா கூறியிருந்தார்.

“இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் சிங்கப்பூர் அமெரிக்காவின் முக்கிய உத்திபூர்வப் பங்காளித்துவ நாடு. அது அமெரிக்காவின் தோழமை நாடு. வட்டாரத்தின் மற்ற நட்பு நாடுகளோடு சிங்கப்பூருடனும் அணுக்கமாக இருப்பது முன்பைவிட இன்று மிகவும் முக்கியம்,” என்றார் அவர்.

ஜூலை மாதம் செனட் சபையில் நடைபெற்ற கேள்வி-பதில் அங்கத்தின்போது டாக்டர் சின்ஹா ஜனநாயக செனட்டர் டாமி டக்வொர்த் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கச் சிரமப்பட்டார்.

டாக்டர் சின்ஹாவின் துணைவியார் டாக்டர் கிக்கி சின்ஹா. அவர்களுக்கு மகளும் மகனும் பேரப்பிள்ளைகள் மூவரும் உள்ளனர்.

இவ்வேளையில் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர்த் தூதர் லுய் டக் இயூ, டாக்டர் சின்ஹாவையும் அவரின் குடும்பத்தாரையும் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.

டாக்டர் சின்ஹா சிங்கப்பூருக்குப் புறப்படும் முன்னர், அவரின் அதிகாரபூர்வ நியமனக் கடிதத்தில் திரு டிரம்ப் கையெழுத்திடவேண்டும். அதன் பிறகு டாக்டர் சின்ஹா அங்குப் பதவியேற்பார். சிங்கப்பூரில் ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு, அமெரிக்கத் தூதரகத்தில் புதிய தூதராக அவர் அதிகாரபூர்வமாகப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்.

குறிப்புச் சொற்கள்