பன்முகத் தன்மையுடன் மிளிரும் சிங்கப்பூரின் கலை, கலாசாரச் சூழலுக்குச் சிறப்பான வகையில் பங்களிப்பு நல்கியதற்காக புகழ்பெற்ற இந்தியக் குழலிசைக் கலைஞரான முனைவர் கானவினோதன் ரத்னத்திற்கு சிங்கப்பூரின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.
நாட்டின் மதிப்புமிகு கலாசாரப் பதக்கத்தை இந்திய செவ்விசைக் கலைஞர் பெறுவது இதுவே முதல்முறை.
தேசியக் கலைக்கூடத்தில் புதன்கிழமை (நவம்பர் 27) மாலை நடைபெற்ற விழாவில் சிங்கப்பூரின் கலைத் துறைக்குத் தனித்துவமிக்க பங்களிப்புகளை வழங்கிய கலைஞர்கள் அறுவருக்கு கலாசாரப் பதக்கமும் இளம் கலைஞர் விருதும் வழங்கப்பட்டன.
உள்ளூர் இந்திய இசைச் சூழலுக்கும் காட்சிக் கலைகளுக்கும் ஈடுஇணையற்ற பங்களிப்பை வழங்கியதற்காக முறையே முனைவர் கானவினோதன், சியு ஹொக் மெங் ஆகியோருக்கு கலாசாரப் பதக்கம் வழங்கப்பட்டது.
வயலின் இசைக் கலைஞர் திரு ஆலன் சூ ஸூ ஹோ, இசையமைப்பாளர் இவான் லோ ஜுன் ஃபெங், திரைப்படத் தயாரிப்பாளர் டான் சி என், அச்சுச் சிற்பி ஸாங் ஃபுமிங் ஆகியோர் இளம் கலைஞர் விருது பெற்றனர்.
விருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் உலகளாவிய அரங்கில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தும், உள்ளூர் கலைகளை அனைத்துலக அரங்கில் மேலோங்கச் செய்தும் அவரவர் துறைகளில் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனர் என்று தேசிய கலைகள் மன்றம் தெரிவித்தது.
“இந்த ஆண்டு கலாசாரப் பதக்கமும் இளம் கலைஞர் விருதும் பெற்றவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் துறைகளில் கலைத்துறைக்குத் தனித்துவமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிங்கப்பூர் கலை கலாசாராத்திற்கு செறிவையும் புனைவாக்கச் சிறப்பையும் அவர்கள் அளித்துள்ளனர்,” என்று விருது விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் தர்மன் தெரிவித்தார்.
மதிப்புமிகு விருதைப் பெற்ற 63 வயது கலைஞரும் இசையமைப்பாளருமான கானவினோதன் ரத்னம், விருது பெற்ற செய்தி செவிக்கு எட்டியபோது உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் சிந்தியதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடந்து வந்த பாதையைப் பின்னோக்கிப் பார்க்கையில், இந்நிலைக்கு வந்து சேர தொடர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன் என்பதை அறிவேன்.
“பல்வேறு நிலைகளில் எனக்கு உதவிய நல்லுள்ளங்கள், ஆதரித்த சமூகம், உடன் பயணம் செய்யும் சக கலைஞர்கள் என ஒவ்வொருவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்,” என்றார்.
தமது பெயரும் தமக்கு வாய்த்த ஓர் விருது என்ற கானவினோதன், சிங்கப்பூர் அரசின் இந்த உயரிய விருதை காலஞ்சென்ற தம் பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாக மனம் நெகிழ்ந்து கூறினார்.
சிங்கப்பூரில் கலை, இலக்கிய மேம்பாட்டுக்குப் பங்களித்த தலைசிறந்த கலைஞர்கள், இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் கலாசாரப் பதக்கம் 1979ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2024ஆம் ஆண்டு வரை 137 பேருக்கு இப்பதக்கம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.


