சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் ஆலோசனை மருத்துவராக முன்னாள் சுகாதார, மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன் மீண்டும் இணைந்துள்ளார்.
டாக்டர் கோ, தற்போது ஆலோசனை அறுவை சிகிச்சை நிபுணராகவும் பகுதி நேர அடிப்படையில் மருத்துவப் பணியைத் தொடர்வதாகவும் புதன்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தார்.
அதுகுறித்து 54 வயது டாக்டர் கோ தமது சமூக ஊடகப் பதிவிலும் பதிவிட்டார்.
சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் மீண்டும் மருத்துவப் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், “பொது, தனியார் சுகாதாரத் துறைகளுக்கு இடையிலான மனிதர்கள், யோசனைகள், திறன்கள் ஆகியவற்றை தொடர்ந்து ஒருங்கிணைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் முதல் ‘டோமாய்’ அறுவைச் சிகிச்சை இயந்திர மனிதக் கட்டமைப்பை மருத்துவச் சோதனைகளுக்காக சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை கொண்டுவந்துள்ளதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
திறனை வளர்க்கவும் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் உள்ள பொதுப் பிரிவு தனியார் பிரிவு ஆகியவற்றுக்கு இடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும் இயந்திர மனிதக் கட்டமைப்பு போன்ற சிறப்புவாய்ந்த திட்டங்களை மருத்துவமனைகள் முன்னெடுக்கவும் டாக்டர் கோ உதவ இருப்பதாகவும் தெரிவித்தார்.
குடலியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கோ, குடும்ப காரணங்களுக்காக ஜூன் 1ஆம் தேதி தமது பதவியைக் கைவிட்டார்.
தமது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதாகவும் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக மருத்துவத் துறைக்குத் திரும்பவிருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.
டாக்டர் கோவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர் தொடர்ந்து தெம்பனிஸ் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றுகிறார்.
அரசியலில் அடி எடுத்து வைக்கும் முன் டாக்டர் கோ, 2009ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் பெருங்குடல் புற்றுநோய் மரபணு ஆரோக்கிய சேவையின் நிறுவன இயக்குநராக இருந்தார்.
மேலும், 2008ஆம் ஆண்டிலிருந்து முதல் 2013ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் பெருங்குடல் புற்றுநோய் மூலக்கூறு மரபியல் ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகப் பொறுப்பு வகித்த டாக்டர் கோ, பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்தார்.
பின்னர், அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு தனியார் மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
