சிங்கப்பூரின் அமைச்சரவைக்கு தற்காப்பு அமைச்சரான டாக்டர் இங் எங் ஹென் மிகப் பெரிய சொத்து என்று பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) தெரிவித்தார்.
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார் என்றார் அவர்.
ஏப்ரல் 18ஆம் தேதி அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டாக்டர் இங்குக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தில், பிஷான்-தோ பாயோ குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் ஓர் அங்கமாக 2001ல் அரசியலில் நுழைந்ததிலிருந்து அமைச்சரின் பங்களிப்புகளுக்கு பிரதமர் வோங் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் இங், 2011ல் தற்காப்பு அமைச்சராகப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பு மனிதவள அமைச்சராகவும் கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார்.
தற்போது 66 வயதாகும் டாக்டர் இங், வெற்றிகரமான அறுவை சிகிச்சை வாழ்க்கைத் தொழிலைக் கைவிட்டுவிட்டு சவாலான காலக்கட்டத்தில் மனிதவள அமைச்சில் அவர் வேலை செய்யத் தொடங்கியதை பிரதமர் வோங் சுட்டிக்காட்டினார். அந்த சமயத்தில் தீவிரமான கொள்ளைநோய் பாதிப்பில் சிங்கப்பூர் சிக்கியிருந்தது.
“முத்தரப்பு பங்காளிகளுடன் நெருக்கமாகச் செயல்பட்டு குறைந்த வருமான ஊழியர்களை மேம்பட உதவினார். வேலைப் பாதுகாப்பை மேம்படுத்தினார்.
“வேலையிடப் பாதுகாப்பு, உயிரிழப்புகளைக் குறைக்க பெரிய அளவிலான சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார். வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்” என்று பிரதமர் வோங் மேலும் தெரிவித்தார்.
“வாழ்நாள் கற்றல் அவசியத்தை அங்கீகரித்த நீங்கள், ஊழியர்கள் மறுதிறன்களை பெறவும் திறன்களை மேம்படுத்தவும் ஊழியர் அணி மேம்பாட்டு முகவையை (தற்போது சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பு ) அமைத்தீர்கள். இது, ஊழியர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற உதவியது என்று திரு வோங் பாராட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
அரசியலிலிருந்து ஓய்வு பெறும் மற்றொரு அமைச்சரான மாலிக்கி ஒஸ்மானையும் அவர் பாராட்டினார்.
வெளியுறவு அமைச்சில் டாக்டர் மாலிக்கி ஒஸ்மானின் பத்து ஆண்டுகால சேவை, சிங்கப்பூரின் பிற நாடுகளுடனான பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும் சிங்கப்பூரின் வெற்றிக்கான அனைத்துலக ஆதரவைத் திரட்டவும் உதவியது என்றார் பிரதமர்.
“மூத்த அரசியல் பதவியில் இருந்த திரு மாலிக்கிக்கு எழுதிய ஒரு பாராட்டுக் கடிதத்தில், இவ்வட்டார பங்காளி நாடுகளான புருணை, மலேசியா மற்றும் இந்தோனீசியா மற்றும் மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் சிங்கப்பூருடன் பங்கேற்பதற்காக டாக்டர் மாலிக்கி சிரமமான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. “கலாசாரம் மற்றும் மொழியில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், சிங்கப்பூர் ஏன் முக்கியம் என்பதற்கான நம்பிக்கையை மேம்படுத்தி சிங்கப்பூருடன் பிணைப்பை வலுப்படுத்த நீங்கள் வழிகளைக் கண்டறிந்தீர்கள்,” என்று அந்தக் கடிதத்தில் திரு வோங் குறிப்பிட்டுள்ளார்.