ஈரானுக்கு உதவும் நாடுகள்மீது கடுமையான நடவடிக்கை: அமெரிக்க அதிபர் சூளுரை

ஈரானுக்கு உதவும் நாடுகள்மீது கடுமையான நடவடிக்கை: அமெரிக்க அதிபர் சூளுரை

2 mins read
தற்காப்பிலிருந்து தாக்குதலுக்கு மாறத் திட்டமிடும் ஈரான்
5ce440b5-195b-4f59-a5ac-c000352dc5d2
நவம்பர் மாதத் தேர்தல் நெருங்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரான் போர் தொடர்பில் கடுமையான உள்நாட்டு அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறார். - படம்: புளூம்பெர்க்
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: ஈரானின் பொருளியலைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில் புதிய பிரசாரத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இஸ்லாமியக் குடியரசான ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) எச்சரித்துள்ளார்.

ஈரான் போர் ஆறாவது மாதத்தை நெருங்கும் வேளையில் ஹோர்முஸ் நீரிணை முடங்கியுள்ள சூழல் உலக நாடுகளின் வர்த்தகத்தைப் பாதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபரின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் மாத இடைத்தவணைத் தேர்தல் நெருங்குவதால், இந்தப் போர் அமெரிக்கப் பயனீட்டாளர்கள், ராணுவம் ஆகிய தரப்புகளின்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பிலான உள்நாட்டு அரசியல் நெருக்கடியை திரு டிரம்ப் எதிர்கொள்கிறார்.

ஈரான்மீதான இந்தப் பொருளியல் தடை முன்னெப்போதும் இல்லாத அளவில் இருக்கும் என அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஈரானுக்கு நிதி நிறுவனங்கள், வர்த்தகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகள் வாயிலாக உதவி செய்யும் எந்தவொரு நாடும் கடுமையான பொருளியல் விளைவுகளைச் சந்திக்கும் என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் எவ்வகையான தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிடவில்லை.

எண்ணெய்க் கடத்தல், பணப் பரிமாற்றம் போன்ற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அமெரிக்காவுடன் இணைந்து ஈரானைத் தனிமைப்படுத்த அனைத்து நட்பு நாடுகளுக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் நிதியாதாரத்தைத் துண்டிக்கும் நோக்கில் அமெரிக்க நிதித் துறை ‘ஆப்பரேஷன் எகனாமிக் ஃபியூரி’ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குப் பின்னரும் ஈரான் தனது உறுதியான நிலைப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. 2026 பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுடன் ஈரான் மீதான போர் தொடங்கியது. அதுமுதல், மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

நேரடித் தாக்குதல் முறைக்கு மாற ஈரான் ராணுவம் திட்டம்

இவ்வேளையில், தற்காப்புத் தாக்குதலிலிருந்து நேரடித் தாக்குதல் முறைக்கு மாற ஈரான் ராணுவம் திட்டமிட்டுள்ளது. ஈரானின் இந்தத் திட்டம், அமெரிக்காவின் நெருக்கடிகளை முறியடித்துத் தனது கோரிக்கைகளை வென்றெடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களை அடுத்து வளைகுடா நாடுகளுக்குப் பதிலடி கொடுத்து வந்த ஈரான், தற்போது தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும், உலகளாவிய எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைத் தன்வசம் வைப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க ஈரான் திட்டமிடுகிறது.

ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி, ராணுவத்தை வலுப்படுத்தி எதிரிகள்மீது பெரும் தாக்குதல்களை நடத்தத் தயாராகுமாறு தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா தொடர்ந்து தடையை நீட்டித்து வருவதால், சூழ்நிலை தவிர்க்க முடியாததாக மாறும்போது தாமதிக்காமல் உடனடியாகத் தாக்குதலைத் தீவிரப்படுத்த ஈரான் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஈரான்அமெரிக்காஅதிபர்டோனல்ட் டிரம்ப்