பிள்ளைகளைக் கண்டிக்கும் நோக்கில் அளவுக்கு அதிகமாக அவர்களை அடிப்பதோ உடல் ரீதியான தண்டனைகளைக் கொடுப்பதோ துன்புறுத்தலாகக் கருதப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
துன்புறுத்தலுக்கு ஆளாகி மேகன் கங் என்ற சிறுமி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிள்ளைப் பாதுகாப்புக் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்று நவம்பர் 5ஆம் தேதி சமூகச் சேவைகள் ஒருங்கிணைப்பிற்குப் பொறுப்புவகிக்கும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிள்ளைப் பாதுகாப்புச் சேவைப் பிரிவின் அதிகாரிகள் துன்புறுத்தப்படும் பிள்ளையை எப்போது அதன் குடும்பத்திடமிருந்து மீட்கவேண்டும் என்ற கேள்வியும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த கல்வியமைச்சருமான திரு லீ, பிள்ளைப் பாதுகாப்பு முயற்சிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதாகச் சொன்னார்.
பொதுவாக எப்போது ஒரு பிள்ளையைத் துன்புறுத்தும் குடும்பத்திடமிருந்து மீட்கவேண்டும் என்ற முறையான வரையறை நடப்பில் உள்ளது என்ற அவர், “பிள்ளைகளைக் கண்டிக்கவேண்டும் என்ற பெற்றோரின் எண்ணத்தை மதிக்கிறோம். ஆனால், அளவுக்கு அதிகமான தண்டனைகள் துன்புறுத்தலாகக் கருதப்படும்,” எனக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, கண்டிக்கப்படும் பிள்ளைகளுக்குக் காயம் ஏற்பட்டால் அது துன்புறுத்தலாக வகைப்படுத்தப்படும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கண்டிப்பாக நடத்துவது வழக்கம். சிங்கப்பூர்ப் பிள்ளைகள் சங்கமும் யேல்-என்யுஎஸ் கல்லூரியும் இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றில் அது தெரியவந்தது.
ஆய்வில் பங்கேற்ற கிட்டத்தட்ட 750 பெற்றோரில் பாதிக்கும் அதிகமானோர் பிள்ளைகளைக் கண்டிக்க அவர்களைக் கையாலோ ஏதாவது பொருளாலோ அடிக்கும் முறையைக் கையாண்டிருப்பதாகக் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றும்போது பிள்ளைக்குக் கடுமையான காயம் ஏற்பட்டால் அது துன்புறுத்தல் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
பிள்ளையின் தோல் கிழியும் அளவுக்கு ஒரு வாரத்தில் பலமுறை பிரம்பைப் பயன்படுத்துவது, பிள்ளையைச் சுவரில் மிகவும் பலமாகச் சுவருக்கு எதிராகத் தள்ளுவது ஆகியவை துன்புறுத்தலாகக் கருதப்படும் என்றார் அவர்.
அத்தகைய வகையில் நடந்துகொள்ளும் பெற்றோர் பிள்ளைகளை மனத்தளவிலும் பாதிக்கின்றனர் என்ற அமைச்சின் பேச்சாளர், அந்தப் பிள்ளை அடுத்தவர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகவும் வளர வகைசெய்கிறது என்றார்.
பெற்றோர் தொடர்ந்து பிள்ளையை மட்டந்தட்டும்போதும் அது நடக்கிறது என்றார் அவர்.

