தானியக்கச் சிற்றுந்துகளும் சரக்கு வாகனங்களும் சிங்கப்பூர் சாலைகளில் சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலான தானியக்க வாகனங்களை சாலைகளில் இயக்க சிங்கப்பூர் எண்ணம் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இப்போதைக்குத் தானியக்க சிற்றுந்துகளிலும் சரக்கு வாகனங்களிலும் அதிகாரிகள் கவனம் செலுத்துவர் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில பாதைகளில் கணிப்பதற்கு ஏதுவான எண்ணிக்கையில் அத்தகைய வாகனங்களைச் செயல்படுத்த முடிவது போன்றவை அதற்கான காரணங்களில் அடங்கும் என்று திரு சீ குறிப்பிட்டார்.
“அத்தகைய வாகனங்களைத் தகுந்த நேரங்களில் குறைவான வேகத்தில் ஓடச் செய்யும்போது அபாயங்களைக் கவனமாகக் கையாள முடியும்,” என்றும் அமைச்சர் சொன்னார்.
புதன்கிழமையன்று (நவம்பர் 6) நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலக போக்குவரத்து மாநாடு, கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் திரு சீ, 5,000க்கும் அதிகமான போக்குவரத்துத் துறை நிபுணர்களிடம் பேசினார். இந்நிகழ்ச்சி ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
ஏற்கெனவே இருவகை தானியக்க வாகனங்களைப் பயன்படுத்த நிலப் போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.
அவை, ஏர்லைன் ரோடு, மரீன் கோஸ்டல் ரோடு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ‘சை தியாம் மெய்ன்டெனன்ஸ்’ நிறுவனத்தின் மின்சார சாலைத் துப்புரவு வாகனங்கள், ஃபேர்பிரைஸ் பேரங்காடிக் குழுமத்தின் பினோய், ஜூ கூன் விநியோக நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் மின்சாரத் தளவாட வாகனங்கள் ஆகியவை ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
அந்த இருவகை தானியக்க வாகனங்களும் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் சோதனைகளில் வெற்றிகரமாகத் தேறின. வெளிநாடுகளிலும் அவை சீராக இயங்குவது உறுதிப்படுத்தப்பட்டது என்று திரு சீ சுட்டினார்.
தானியக்க வாகனங்கள் தொடர்பில் மற்ற நிறுவனங்களுடன் பணியாற்ற நிலப் போக்குவரத்து ஆணையம் தயாராய் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.