ஒரு பேருந்தும் லாரி ஒன்றும் மற்றொரு பேருந்து மீது லோயாங் அவென்யூ பகுதியில் மோதிக்கொண்டதில் ஓட்டுநர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
லோயாங் அவென்யூ, பாசிர் ரிஸ் டிரைவ் 1 சாலைச் சந்திப்பருகே மே 30 நிகழ்ந்த இவ்விபத்து குறித்து தங்களுக்கு காலை 9.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்வழி தெரிவித்தது.
இரண்டு எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துகளுக்கு இடையே லாரி ஒன்று நசுங்கியபடி இருப்பதைக் காட்டும் படமும் காணொளியும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சாங்கி தீயணைப்பு நிலையத்தையும் தெம்பனிஸ் தீயணைப்பு நிலையத்தையும் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் வருவதற்குள் இரு பேருந்துகளிலும் இருந்த சுமார் 40 பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பேருந்துப் பயணிகளுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று எஸ்பிஎஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
பேருந்தில் 69 வயது ஓட்டுநர் தனது இருக்கையில் சிக்கிய நிலையில் இருந்தார்.
தீயணைப்பு வீரர்களால் விடுவிக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர், 31 வயது லாரி ஓட்டுநருடன் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
காவல்துறை விசாரணைக்கு எஸ்பிஎஸ் டிரான்சிட் உதவிவருவதாகப் பேச்சாளர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்