லிட்டில் இந்தியாவில் உள்ள ஒரு கடைவீட்டை ரகசியமாக ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு கண்காணித்த காவல்துறை ஏழு பேரைக் கைது செய்தது.
நவம்பர் 30ஆம் தேதி இரவு 9 மணியளவில் இந்தச் சோதனை நடைபெற்றது.
இந்தச் சோதனையில் பாலியல் குற்றச்செயல்களைக் கண்டுபிடிப்பதற்காக இரண்டு ஆளில்லா வானூர்திகளை மத்திய காவல்துறை பயன்படுத்தியது.
ஆறு நாள்களாக பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. கடைசி நாளான நவம்பர் 30ஆம் தேதி சோதனைகளை நேரில் காண ஊடகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
மொத்தம் 196 பேர் சட்டவிரோத வேலை, போதைப்பொருள் குற்றம் ஆகியவற்றுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
மேலும் நால்வர், மோசடி தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
நவம்பர் 30ஆம் தேதி லிட்டில் இந்தியாவில் உள்ள ஒரு கடைவீட்டில் அதிரடிச் சோதனையை மேற்கொண்ட காவல்துறை, பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 23 முதல் 61 வயது வரையிலான ஏழு பேரைக் கைது செய்தது.
அந்த இடம், அக்கம்பக்கக் காவல் நிலையத்திற்கு அருகே இருந்தது. ஆறு ஆண்கள், பெண்களைப் போல உடை அணிந்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் ஒருவர், அனுமதி அட்டை இல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியதற்காகக் கைது செய்யப்பட்டார். இதர ஆறு பேர் வேலை அனுமதிச் சீட்டு இல்லாமல் வேலை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறை அதிகாரிகள் ஒரு குழுவாக வீட்டை உடைத்துக் கொண்டு கடைவீட்டில் புகுந்தனர். அந்தச் சமயத்தில் இரண்டு ஆளில்லா வானூர்திகள் மூலம் அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்தனர்.
மத்தியக் காவல் நிலையத்தின் தலைவரான துணைக் கண்காணிப்பாளர் எஸ்தர் கோ, நகர்ப்புற நடவடிக்கைகளுக்கு வானூர்திகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று குறிப்பிட்டார்.
கடைவீட்டின் நுழைவாயில் அதிக வெளிச்சம் இல்லாமல் இருந்தது. பின்பக்கக் கதவுக்கு அருகே சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மூன்று மாடி கடைவீட்டின் முதல் மாடி, பாலியல் சேவை வழங்குவதற்காக எட்டு சிறிய அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வோர் அறையிலும் ஒரு படுக்கையும் கை கழுவும் தொட்டியும் இருந்தது. பல அறைகளில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் தரையில் வீசப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்ட ஏழு பேரும் இரண்டாவது மாடியில் இருந்த வரவேற்பு அறையில் இருந்தனர் என்று காவல்துறை கூறியது.
அவர்கள் அனைவரும் காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.
லிட்டில் இந்தியாவில் நடந்த சோதனை முழுவதற்கும் ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்பட்டன.
இதற்கு முன்பு 2023 புத்தாண்டின்போது மரினா பே வட்டாரத்தில் கூடிய மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் வானூர்தி பயன்படுத்தப்பட்டது.